ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசு ஊழியர்கள். லாரிகள், கடைகள் இயங்காது
- IndiaGlitz, [Thursday,January 19 2017]
தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்டு வரும் போராட்டம் உலக ஊடகங்களின் கவனத்தை திருப்பியுள்ளது. சென்னை மெரினாவில் ஆரம்பித்த சிறு பொறி இன்று உலகம் முழுவதும் பற்றி எரிகிறது. ஒவ்வொரு துறையாக ஆதரவு கொடுத்து கொண்டே வருவதால் போராட்டத்தின் தீவிரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
இளைஞர்கள், மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்காக இன்று முதல் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் இன்று போராட்டக்களத்தில் இறங்குகின்றனர். இன்று அரசு ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.,
மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக 20ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 50 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார். அதேபோல் வரும் 20ஆம் தேதி தமிழகத்தில் லாரிகள் இயங்காது என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தமிழர்களின் பொதுப்பிரச்சனை ஒன்றுக்காக ஒட்டுமொத்தமாக அனைத்து துறையினர்களும் கைகோர்த்துள்ளது தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.