சாலையில் கிடந்த ரூ.25 லட்சம் மதிப்பு மதுபானங்கள் அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,July 10 2020]
மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று திண்டுக்கல் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததை அடுத்து சிதறிக்கிடந்த மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற மதுப்பிரியர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மதுபான லாரி ஒன்று குடோனில் இருந்து மதுபானங்களை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரி டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
ஆனால் அந்த லாரியில் இருந்த சுமார் 25 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களின் அட்டைப்பெட்டிகள் சாலையில் சிதறிக் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் காயமடைந்த டிரைவரையும் அவரது உதவியாளரும் காப்பாற்றாமல் மதுபானங்களை அள்ளி செய்வதிலேயே குறியாக இருந்தனர். ஒவ்வொருவரும் கை நிறைய மது பாட்டில்களை அள்ளிச் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மது பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்த மதுப்பிரியர்களை அடித்து விரட்டினர். இந்த விபத்தில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் சேதமடைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.