நேருக்கு நேர் மோத தயாரா..? ஸ்டாலினை பார்த்து எடப்பாடி காரசாரக் கேள்வி...!
- IndiaGlitz, [Saturday,March 27 2021]
அதிமுக எதுவும் செய்யவில்லை எனக்கூறும் ஸ்டாலின், என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என முதல்வர் பழனிச்சாமி நெல்லையில் பிரச்சார கூட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தொகுதியில், பணகுடியில் அதிமுக வேற்பாளர் ஐஎஸ்.இன்பதுரையை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
மக்களிடம் பிரச்சாரத்தில் அவர் கூறியிருப்பதாவது,
திமுக-விற்கு நீங்கள் வாக்களித்தீர்கள் என்றால் அது அவர்கள் குடும்பத்திற்கு சார்பாகவே போய் சேரும். காரணம் திமுக வாரிசு அரசியல் கொண்ட கட்சி. அதிமுக ஆட்சியின்போது விவசாயம் மற்றும் வேளாண் துறைகளில் தமிழகம் சிறப்பாக இருந்து வருகிறது. குடி மராமத்து பணிகள் செய்து குளங்கள் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதும் எங்கள் ஆட்சியின் போதுதான். 1300 கோடி செலவிட்டதால் தற்போது நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு உயரிய விருதான விவசாய விருது கிடைத்துள்ளது. இதற்கு காரணம் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்ததுதான்.
கல்வியில் சிறந்த மாநிலமாகவும், ஒரு வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பெற்ற சிறந்த மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது. ஸ்டாலின் அதிமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தரவில்லை எனக்கூறுகிறார். ஆனால் கடந்த 4 வருடங்களில், அதிமுக ஆட்சியில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். சரி இந்த ராதாபுரம் தொகுதியில் ஒரே மேடையில் என்னுடன் அவர் நேருக்கு நேர் விவாதிக்க வருவாரா..? வரமாட்டார். காரணம் அவர் கையில் பேச சரியான ஆதாரம் இருக்காது. கடந்த நான்கு வருடங்களில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துள்ளேன். கூடுதல் நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்ட ஒரே முதல்வர் நான்தான். ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி எனில் அதில் திமுக தான், என்று முதல்வர் பரப்புரை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி தேர்தல் பரப்புரையில் எடப்பாடியார் பேசியதாவது,
குமரியில் சரக்கு பெட்டக துறைமுகம் வர இருப்பதாக திமுகவினர் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். இங்கு கட்டாயமாக துறைமுகம் வராது என்பதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். மீனவர்களின் ஓட்டுக்களை பிரிப்பதற்காக காங்-திமுக கூட்டணி இப்படிப்பட்ட அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றன. ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கும் எதிர்க்கட்சியினர் சொல்வதை மக்கள் நம்ப வேண்டாம் என பிரச்சாரம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி.