லுக்அவுட் நோட்டீஸ் உடன் டேராடூன் விரைந்த சிபிசிஐடி… கிடுக்குப்பிடியில் சிவசங்கர் பாபா!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில் சிவசங்கர் பாபா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 8 பிரிவுகளின்கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் புகாரை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் ஆன்மீகச் சுற்றுலாவிற்காக டேராடூன் சென்றுள்ள சிவசங்கர் பாபாவிற்கு அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து பாலியல் தொல்லை புகார்களில் இருந்து தப்பிக்கவே அவர் இப்படி நாடகமாடுகிறார் என முடிவுசெய்த டிஜிபி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினார்.

இதனால் சென்னை சிபிசிஐடி போலீசார் தற்போது டேராடூனுக்கு படையெடுத்து உள்ளனர். மேலும் சிவசங்கர் பாபா வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்ல முடியாதபடி அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சிவசங்கர் பாபாவிற்கு பல வழிகளிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவர்களின் பாலியல் தொல்லை குறித்த புகாரை அடுத்து தற்போது பல்வேறு பள்ளிகளின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. அந்த வகையில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பல மாணவிகள் ஆன்லைனில் புகார்களை தெரிவித்து இருந்தனர்.

இந்தப் புகார்களை முதலில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தியது. ஆனால் சிவசங்கர் பாபா இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு தராததால் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை கேளம்பாக்கத்தில் கடந்த 30 வருடத்திற்கும் மேலாக சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் நடத்திவருகிறார். அதற்கு முன்பு லாரி பட்டரை வைத்து நடத்தி வந்த இவர் சாமியாடுகிறேன் என்ற பெயரில் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு ஆடிக்கொண்டே குறிசொல்வதுதான் இவரது தனி சிறப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த குறிசொல்லும் பழக்கம் பள்ளிகூடம் வரை தொடர்ந்ததாகவும் அப்படி நடக்கும் விழாக்களில் மாணவிகளிடம் அத்துமீறல் நடந்ததாகவும் பல புகார்கள் குவிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது டேராடூன் சென்றுள்ள சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை கைது செய்வது குறித்து தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது. அதோடு வெளிநாடு தப்பிச் செல்லமுடியாத படி அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டுள்ளது.