இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே சேற்றை வாரி பூசிய அதிபர் ட்ரம்ப்… விமர்சனத்தால் சர்ச்சை!!!
- IndiaGlitz, [Friday,October 23 2020]
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அந்நாட்டின் இருகட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக குடியரசு கட்சி வேட்பாளர் டெனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் ஆகிய இருவருக்கும் இடையே நேரடியான விவாதங்களும் நடைபெற்றது. அந்த விவாதத்தில் ஜோ பிடன் மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் அடுத்தவர்கள் மீதான எதிர்மறை கருத்துகளை விமர்சனமாக வைத்த வந்தனர்.
அந்த விவாதத்தில் ஜோ பிடன் கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், அமெரிக்காவிற்கு நல்ல சுத்தமான காற்று வேண்டும். நாம் கடந்த 35 ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைத்து இருக்கிறோம். ஆனால் சீனாவை பாருங்கள் அது எவ்வளவு அசுத்தமானது, ரஷ்யாவைப் பாருங்கள். இந்தியாவை பாருங்கள், அது அசுத்தமானது, காற்று அசுத்தமானது, நாம் நம்பமுடியாத வேலைகளை செய்துள்ளோம் எனக் கடுமையான விமர்சனத்தை வைத்திருந்தார்.
அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்தது முதற்கொண்டே இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு நட்பு முறையிலான பயணத்தையும் மேற்கொண்டு இருந்தார். இந்திய-சீன எல்லை விவகாரத்திலும் ட்ரம்ப் இந்தியாவிற்கு ஆதரவாகவே கருத்துத் தெரிவித்தார். மேலும் தென்சீனக் கடல் பகுதியில் நிலவும் பிரச்சனையிலும் அமெரிக்கா-இந்தியா ஆகிய இருநாடுகளும் இணைந்தே செயல்பட்டு வருகின்றன.
மேலும் H1-B விசாக்களில் நிலவும் தடை, சில இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்தது என சில விஷயங்களில் மட்டுமே ட்ரம்ப் இந்தியாவிற்கு எதிர்மறையாக செயல்பட்டார். அதைத் தவிர இந்தியா மீதான அனைத்து நிலைகளிலும் அதிபர் ட்ரம்ப் உடன்பாடான வகையிலேயே செயல்பட்டு வருகிறார். ஆனால் அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் இப்படி இந்தியா மீது எதிர்மறையான கருத்தை தெரிவித்து இருப்பது குறித்து பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
காரணம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு எண்ணிக்கை அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. அதனால்தான் H1-B விசாக்கள் பற்றிய பிரச்சனையையும் தொடர்ந்து ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.