இந்தியாவிற்காக ஒலிம்பிக் ஜோதியை சுமந்த இளம்பெண்… இன்று தினக்கூலியாக மாறிய அவலம்!
- IndiaGlitz, [Tuesday,August 10 2021] Sports News
கடந்த 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான ரிலேவில் இந்தியா சார்பாக 17 வயதேயான பிங்கி கர்மாகர் என்பவர்தான் கலந்துகொண்டார். அன்றைக்கு 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பிங்கி கர்மாகர் குறித்து ஒட்டுமொத்த ஊடகங்களும் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வந்தன.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திப்ருகர்மா எனும் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி. தேயிலை தோட்டங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் யுனிசெஃப் சார்பாக 40 பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்துவந்தார். அதோடு குழந்தை திருமணம், வயதானவர்களின் கல்வி, சமூகப்பிரச்சனை போன்றவற்றில் ஆர்வம் கொண்ட பிங்கி அந்தந்த ஊர் பெரியவர்களுடன் இணைந்துகொண்டு பல்வேறு சமூக காரியங்களை செய்துவந்தார்.
இதனால் கவனம் ஈர்த்த பிங்கி கர்மாகர் 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் ரிலே நிகழ்ச்சிக்காக இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும ஒலிம்பிக் ரிலேவில் இந்திய வீரர், வீராங்கனைகளை வழிநடத்தியும் சென்றார். இதனால் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பிங்கி கர்மாகர் அன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவின் பெருமிதமாகவும் கொண்டாடப்பட்டார்.
ஆனால் 9 ஆண்டுகளுக்கு பிறகு பிங்கி கர்மாகர் தற்போது திப்ருகர்மா பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் தினக்கூலியாக வேலைசெய்து வரும் அவலம் பார்ப்போரை பதைக்க வைத்திருக்கிறது. தாய் மற்றும் தந்தை இருவரின் இழப்புக்குப் பிறகு பிங்கி தனது சகோதரர் மற்றும் 2 தங்கைகளுக்காக தினமும் 167 ரூபாய் கூலிக்காக தேயிலை தோட்டத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
கடந்த 2012 வாக்கில் 40 முதிர்ந்த பெண்களுக்கு கல்வியறிவு கொடுத்துவந்த பிங்கி கர்மாகரின் உயிர்கல்வியும் பறிபோய் தற்போது வாழ்வாதாரத்திற்கே அவதிப்படும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பிங்கி கர்மாகர் பற்றிய செய்தி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.