சூர்யா படத்தை இயக்காததற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான்: லோகேஷ் கனகராஜ்

சூர்யா நடித்த படத்தை இயக்காததற்கு ஒரே ஒரு காரணம் நான் தான் என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

’மாநகரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின் ’கைதி’ ’மாஸ்டர்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக ’தளபதி 67’ திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ’இரும்புக்கை மாயாவி’ என்ற திரைப்படம் உருவாக இருந்தது. இது குறித்த அறிவிப்பு வெளியாகி ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய லோகேஷ் கனகராஜ், ‘இரும்புக்கை மாயாவி படத்திற்காக எட்டு மாதங்கள் பணி செய்ததாகவும், ஆனால் ஒரு கட்டத்தில் இந்த படத்தை இயக்குவதற்கான தைரியம் தனக்கு இல்லை என்றும் இதை ஓப்பன் ஆகவே தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்களிடம் கூறி, என்னால் இந்த படத்தை இப்போதைக்கு இயக்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் சில ஆண்டுகள் கழித்து இந்த படத்தை இயக்கலாம் என்றும் அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.

எனவே சூர்யாவின் படத்தை இயக்காததற்கு நான் மட்டுமே காரணம் என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இருப்பினும் ’இரும்புக்கை மாயாவி’ திரைப்படம் விரைவில் உருவாகும் என்று ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.