3 படங்களிலும் போதைப்பொருள் ஏன்? லோகேஷ் கனகராஜ் தந்த விளக்கம்
- IndiaGlitz, [Thursday,June 09 2022]
லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டதாக இருந்தது ஏன் என்பதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் காட்டப்பட்டிருக்கும். அதேபோல் போதைப்பொருளுக்கு அடிமையான விஜய், தற்செயலாக ஏற்பட்ட விபத்திற்கு பிறகு போதைப்பொருளுக்கு எதிராக அவர் திரும்புவது தான் ’மாஸ்டர்’ படத்தில் கதையாக இருக்கும். அதேபோல் ‘விக்ரம்’ படத்தின் கதையிலும் போதைப்பொருள் தான் படத்தின் மையக்கரு என்பது குறிபிடத்தக்கது.
இந்த நிலையில் மூன்று படங்களிலும் போதை பொருள் சம்பந்தப்பட்ட கதை ஏன் என்பது குறித்த கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்த போது ’இது சமூக அக்கறையின் காரணமாக ஏற்பட்டது என்றும் நான் இயக்கும் படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்களாக அமைந்து விடாமல் சமூக அக்கறையுடன் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.
போதைப்பொருளுக்கு எதிராக கமல்ஹாசன், விஜய் போன்ற பெரிய ஸ்டார்கள் பேசினால் போதைப் பொருள் அற்ற ஒரு சமூகம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் போதைப்பொருளுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.