நட்சத்திர தொகுதி: மத்திய சென்னையின் மக்கள் வேட்பாளர் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளுமே தமிழகத்தின் முக்கியமான தொகுதி என்றாலும் மத்திய சென்னை கூடுதல் முக்கியத்துவம் பெற்ற தொகுதி. வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இந்த தொகுதி கிட்டத்தட்ட திமுகவின் கோட்டை என்றே கூறலாம்.
இந்த தொகுதியில் 1980, 1984 தேர்தல்களில் திமுகவும், 1989, 1991 தேர்தல்களில் காங்கிரசும், பின் மீண்டும் 1996 முதல் 2009 வரை மீண்டும் திமுகவும் வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் மூன்று முறை முரசொலி மாறனும், இரண்டு முறை தயாநிதி மாறனும் எம்பியாக இருந்துள்ளனர். கடைசியில் கடந்த 2014ஆம் ஆண்டுதான் திமுகவிடம் இருந்து அதிமுக இந்த தொகுதியை கைப்பற்றியது.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தயாநிதி மாறன் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இரண்டு முறை எம்பியாக இருந்தவர், மத்திய அமைச்சராக இருந்தவர், கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமானவர், தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ஆகியவை இவருக்கு உள்ள சாதகமான அம்சங்கள் ஆகும். மேலும் இந்த தொகுதியில் அதிமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சியான பாமக போட்டியிடுவதும் தயாநிதி மாறனுக்கு கூடுதல் சாதகம் ஆகும்
ஆனால் அதே நேரத்தில் இந்த தொகுதி முஸ்லீம் வாக்குகள் அதிகம் கொண்ட தொகுதி. 2019 தேர்தலில் திமுக ஒரு இஸ்லாமிய வேட்பாளரை கூட நிறுத்தவில்லை என்பதால் இஸ்லாமிய சமூகத்தினர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியை அறுவடை செய்யவே கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த தொகுதியில் நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசரை நிறுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடமாக மக்கள் நீதி மய்யத்தில் கடுமையாக உழைத்து வரும் இவருக்கு கட்சியின் தொண்டர்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியதையும் இருப்பதால் கட்சியினர் இவருடைய வெற்றிக்காக கடுமையாக வேலை செய்வார்கள் என்பது தயாநிதி மாறனுக்கு பாதகமான அம்சம் ஆகும்
அதேபோல் இந்த தொகுதியில் தினகரனின் அமமுக கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவியை வேட்பாளராக அறிக்கப்பட்டுள்ளார். இஸ்லாமிய சமூகத்தினர்களுக்கு தெகலான் பாகவி தனிப்பட்ட முறையிலும் கட்சிரீதியிலும் பல நன்மைகளும் பொதுச்சேவையும் செய்துள்ளதால் பெரும்பாலான இஸ்லாமிய வாக்காளர்கள் இவருக்கு வாக்களிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தினகரனின் 'செல்'வாக்கும் கடைசி நேரத்தில் இவருக்கு கைகொடுக்கும் என்பதும் இவருக்கு சாதகமான ஒரு அம்சம் ஆகும்.
அதேபோல் பாமக வேட்பாளர் சாம் பால் என்பவர் சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர். இவரும் மற்ற வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை தரக்கூடியவர். சென்னையின் பல கிளைகள் கொண்ட சலூனுக்கு சொந்தக்காரரான இவருடைய சலூன்களில் தான் பிரபல நட்சத்திரங்கள் முடிதிருத்த வருவார்களாம். இவருடைய சலூன்களில் ஒரு கிளையை நடிகர் நாசர் திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சினிமா உள்பட பல தொழில்களில் ஈடுபட்டு வருபவர். மேலும் பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரும் இவர்தான். இவர் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது இவரது கூடுதல் தகுதி. எனவே இந்த தொகுதியில் இவர் மற்ற வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை தரவல்லவர் என்பது உறுதி
இப்போதைய நிலையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு இந்த தொகுதி சாதகமாக இருந்தாலும் திமுகவினர் கடுமையாக வேலை செய்து இன்றைய நிலையை தேர்தல் நாள் வரை தக்க வைத்து கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் தெகலான் பாகவி அல்லது கமீலா நாசர் தொகுதியை தட்டிச்சென்றுவிடும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments