இரண்டு வாரிசுகள் மோதும் தென்சென்னை! வெற்றி யாருக்கு?

வாரிசு அரசியல் செய்வதாக ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை குற்றஞ்சாட்டியபோதிலும், ஒவ்வொரு கட்சியும் தேர்தல் சமயத்தில் தங்களுடைய வாரிசுகளைத்தான் களமிறக்கியுள்ளது. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ் என எந்த கட்சியிலும் வாரிசுகள் இல்லாத வேட்பாளர் பட்டியலே இல்லை எனலாம்

இந்த நிலையில் சென்னையின் ஒரு தொகுதியான தென்சென்னையில் இரண்டு வாரிசு அரசியல்வாதிகள் நேருக்கு நேர் மோதுகின்றனர். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தனும், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியனும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

தியாகராய நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய சட்டசபை தொகுதிகள் கொண்ட தென்சென்னை தொகுதி பேரறிஞர் அண்ணா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, முரசொலிமாறன், வெங்கட்ராமன், வைஜயந்தி மாலா, போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் வெற்றி பெற்ற தொகுதியாக திகழ்கிறது. இந்த தொகுதியை பொருத்தவரை திமுகவின் கோட்டை என்றே கூறலாம். கடந்த 1962 முதல் 1977 வரையிலும், 1996 முதல் 2009 வரையிலும் இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இடையில் 1977 முதல் 1991 வரை காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்றியிருந்தது முதல்முறையாக 2009 தேர்தலில்தான் அதிமுக இந்த தொகுதியை கைப்பற்றி அதன்பின் 2014ல் தொகுதியை தக்க வைத்து கொண்டது.

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் 4 லட்சத்திற்கு அதிகமான ஓட்டுக்களை பெற்று அமோக வெற்றி பெற்றார். மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர், தற்போதைய எம்பி, எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை, அப்பாவான அமைச்சர் ஜெயகுமார் கிட்டத்தட்ட தினமும் செய்தியாளர்களை சந்தித்து ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெறுபவர், சொந்த செல்வாக்கு, கட்சி செல்வாக்கு என பல சாதகமான அம்சங்கள் ஜெயவர்தனுக்கு உண்டு. இருப்பினும் ஒரு மிகப்பெரிய பாதகமான அம்சம் இந்த தொகுதியில் உள்ள சுமார் 30% சிறுபான்மையர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு விழ வாய்ப்பில்லை என்பதுதான். அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் சிறுபான்மையர்களின் ஒரு ஓட்டு கூட அதிமுகவுக்கு விழ வாய்ப்பு இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். ஒருவேளை அதிமுக தனித்து போட்டியிருந்தால் கூட ஜெயவர்தனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறுபவர்களும் உண்டு. மேலும் இந்த தொகுதியில் தினகரனின் அமமுக சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சரான இவர் அதிமுக ஓட்டுக்களை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இவர் போட்டியிடுவது அதிமுக வேட்பாளருக்கு பாதகமான அம்சமாகவே கருதப்படுகிறது.

திமுகவின் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், தென்சென்னை தொகுதிக்கு புதியவர் என்றாலும் தமிழகம் முழுவதும் இலக்கியம் மூலம் நன்கு அறிமுகமானவர். இவருடைய தந்தை ஒரு முன்னாள் அமைச்சர் என்பதும் ஒரு சாதகமான விஷயம். தனிப்பட்ட தமிழ் இலக்கிய செல்வாக்கு, திமுக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர், பன்முக திறமைசாலி. சென்னை ராணி மேரிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர், பல நூல்களை எழுதிய நூலாசிரியர், பரதநாட்டிய கலைஞர் என தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் என்பது மிகப்பெரிய பிளஸ்கள் ஆகும். மேலும் வலுவான கூட்டணி, சிறுபான்மையர் ஓட்டுக்களை மொத்தமாக பெறும் வாய்ப்பு ஆகியவைகளும் இவர் வெற்றி பெற வாய்ப்பாக உள்ள காரணங்கள் ஆகும். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் இவருக்காக பிரச்சாரம் செய்தபோது ஒரு அழகான வேட்பாளரை இழந்துவிட வேண்டாம் என பேசியது கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது.

இந்த தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் கமல் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. கமல் போட்டியிடுவது உறுதியானால் இந்த தொகுதியின் வெற்றி நிலவரம் தலைகீழாக மாறவும் வாய்ப்பு உண்டு. மேலும் இந்த தொகுதியில் அகில இந்திய குடியரசு கட்சியின் சார்ப்பில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.