ஊரடங்கு ஜுன் 30 வரை தொடருமா? என்ன செய்யும் தமிழக அரசு?
- IndiaGlitz, [Tuesday,May 18 2021]
தமிழகத்தில் தினம்தோறும் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக 30 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இதனால் மே 10 ஆம் தேதி முதல் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் குறைக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வெறும் 2 வாரத்திற்கு ஊரடங்கு பிறப்பித்து விட்டதால் பாதிப்பு எண்ணிக்கையை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து ஊரடங்கை நீடித்து வருகின்றன. இதுபோன்ற அசாதாரண சூழலில் வரும் ஜுன் 30 வரை ஊரடங்கை நீடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற கருத்தை மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கருத்தை ஏற்று தமிழக அரசு ஊரடங்கை நீட்டிக்குமா என்ற சந்தேகம் தற்போது வலுத்து வருகிறது.
முன்னதாக ஊரடங்கு குறித்து பேசிய தமிழக முதல்வர் மே 24 க்கு பின்பு நீட்டிக்கப்படாது எனக் கூறியிருந்தார். அதோடு மருத்துவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். தற்போது தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் இந்தியாவிலேயே அதிகம் பாதிப்பு உள்ள இடங்களில் தமிழகம் 3 ஆவதாக இருக்கிறது. இந்நிலையில் கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
இதேபோன்று தமிழகத்திலும் தொடருமா என்ற கேள்வி இருந்து வருகிறது. இதற்கு பதில் அளித்த கோட்டை வட்டாரங்கள் இந்த வார இறுதிக்குள் மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தப்படும். இதில் மாவட்ட ஆட்சியர்களும் இடம்பெறுவர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி அடுத்த நகர்வுகள் இருக்கலாம். மேலும் மருத்துவர்கள் கூறுவதுபோல ஜுன் 30 வரை நீட்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறியுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப் படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.