பொருட்களின் விற்பனை: பண்டமாற்று முறைக்கு மாற்றிய கொரோனா!!!
- IndiaGlitz, [Monday,April 27 2020]
கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. உலக மக்கள் அனைவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டியிருக்கிறத்து. இத்தனை கொடுமைகளுக்கு நடுவிலும் கொரோனா சில நல்ல விஷயங்களையும் மக்களுக்கு கற்றுத் தந்திருக்கிறது. ஊரடங்கில் வீடடங்கி இருக்கும் மக்களுக்கு அத்யாவசிய தேவை எது? தேவைகளை மீறிய ஆடம்பரம் எது? என்பது போன்ற புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து, நதிகள் மாசில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் பண்டமாற்று முறையும் தற்போது மக்களிடம் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 3 வரை நிடிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் சந்தைகள் இயங்கவில்லை. பொருட்களை வாங்கி செல்வதற்கு பெரு நிறுவனங்களின் வர்த்தகர்கள் வருவதில்லை. உற்பத்தி செய்த பொருட்களை அப்படியே வீடுகளில் தேக்கி வைக்க முடியாத சூழலில் தற்போது விவசாயிகள் பண்டமாற்று முறையில் பொருட்களை விற்று வருகின்றனர்.
பணம் என்ற வடிவம் வருதற்கு முன்பு தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பழங்காலத்தில் பொருட்களின் விற்பனைக்கு பண்டமாற்று முறையையே பயன்படுத்தி வந்தனர். பழந்தமிழகத்தில் நெல்லுக்கு ஈடாக உப்பை பெற்று வணிகம் செய்ததாகவும் நமது இலக்கியத் தரவுகள் கூறுகிறது. அந்த வகையில் தற்போது அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள செட்டித் திருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பண்டமாற்று முறையில் தாம் உற்பத்தி செய்த பொருட்களை விற்று வருகின்றனர்.
பண்டமாற்று முறையில் பொருட்களை விற்பதற்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. விவசாயிகளே நேரடியாகத் தங்களது பொருட்களை விற்கமுடியும். பொருட்களை அதிகவிலைக்கு வாங்க வேண்டிய அவசியம் வாங்குபவர்களுக்கும் இருக்காது. பெருநிறுவனங்களையும் இடைத்தரகர்களையும் நம்பியிருக்காமல் நேரடி விற்பனையில் விவசாயிகளே ஈடுபட்டு நல்ல பலனை பெற்றுவருவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.