முகக்கவசம் போடலனா அபராதம்...!உபி...யில் லாக்டவுன்...!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

உத்திரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

உபி-யில் முக்கிய இடங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. நேற்றைய நிலவரப்படி பார்த்தால், 20,510 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் உபி முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்த உத்திரபிரதேச அரசு முடிவெடுத்துள்ளது, மேலும் மாஸ்க் அணியதாவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக 10 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருப்பதாகவும், அங்கு கண்காணிப்பில் ஈடுபட சிறப்பு குழுக்களை நியமித்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். முதல் முறை மாஸ்க் அணியாமல் வந்தால் ஆயிரம் ரூபாய் அபராதமும், திரும்பவும் அதே தவறை செய்தால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாட்களில், பொது இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படும். ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள உள்ளூர் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும். விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில், கட்டாயமாக கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள், கொரோனா நோயாளிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.