நாடு முழுவதும் ஜுன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: புதிய தளர்வுகள் என்னென்ன?
- IndiaGlitz, [Saturday,May 30 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 1 முதல் ஜூன் 30 நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த 5ஆம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்துள்ளது
இதன்படி ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கலாம் என்றும், மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ள மத்திய அரசு, பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் என்றும், கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதி என்றும், அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கிறது என்றும், பொது இடங்களில் மது, போதைப் பொருட்களை பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது என்றும், சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது