தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு!
- IndiaGlitz, [Saturday,August 07 2021]
தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்ட போதிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இருப்பினும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிக கூட்டம் கூட கூடிய சந்தை பகுதிகளில் வெட்டவெளியில் தனித்தனி கடைகளாக அமைக்க அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் 50 சதவீத மாணவர்கள் அனுமதிப்பது பற்றிய ஆலோசனை செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டதாகவும், அதற்கான வழிமுறைகளை மக்கள் நல்வாழ்வு துறை வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
— TN DIPR (@TNDIPRNEWS) August 6, 2021
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
1/2#CMMKSTALIN | #TNDIPR |#TNLockdownextended |#TNLockdown | #TNGovernment |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/LQeWHzWIOy