ஊரடங்கு தொடருமா? முதல்வர் இன்று அறிவிப்பு!
- IndiaGlitz, [Saturday,June 05 2021]
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றதும் மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மே 17ஆம் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் அந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டு வரும் 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஊரடங்கை நீடிப்பது குறித்து நேற்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுனர்களிடம் ஆலோசனை செய்தார். மருத்துவ வல்லுநர்கள் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை தமிழகம் முழுவதும் நீடிக்க பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டும் ஒரு சில தளர்வுகளை அறிவிக்கவும் அதிகம் உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கவும் தமிழக முதல்வர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று அவர் வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கொரோனா தொற்று மிக தீவிரமாக உள்ளதால் இந்த 10 மாவட்டங்களில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஒரு சில அத்தியாவசிய கடைகள் திறாக்க மட்டும் தளர்வுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.