தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் லாக்டவுனா? என்னென்ன கட்டுப்பாடுகள் வரும்?

  • IndiaGlitz, [Monday,March 29 2021]

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நேற்று 800க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் ஊரடங்கு அல்லது கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டது போல இரவு நேர ஊரடங்கு மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய வைப்பதும் ஆகிய கட்டுப்பாடுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் கடந்த ஆண்டு நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு விதிப்படி வழிபாட்டுத்தலங்கள், மத நிகழ்ச்சிகள், அரசியல் சமூக நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், ஆகியவை மூடப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் போக்குவரத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்படுவதால் தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.