மே 3க்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை
- IndiaGlitz, [Wednesday,April 22 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதல் கட்ட ஊரடங்கு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை இருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து விட்டது.
இந்த நிலையில் மே 3ஆம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கு உத்தரவை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் மே 3ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்குமா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதாக இருந்தால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிசெய்துவிட்டு நீட்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு அவசியம் என்றாலும், கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கையை விட பசியால் பலியாகும் எண்ணிக்கை அதிகரித்துவிடாதவாறு பார்த்து கொள்வது அரசின் கடமை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.