நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
- IndiaGlitz, [Sunday,May 17 2020]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதனை அடுத்து சற்று முன்னர் மத்திய அரசு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலத்திற்கு ஏற்றவாறு சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழகம், மகாராஷ்டிரா உட்பட ஒரு சில மாநிலங்கள் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மே 31-ஆம் தேதி வரை மீண்டும் பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவுக்காண விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.