மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,April 14 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்றுடன் பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததை அடுத்து சற்று முன் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது:
கொரோவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். நாட்டு மக்களின் ஒத்துழைப்பால் ஊரடங்கு உத்தரவு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது. ஊரடங்கால் சிலருக்கு ஏற்பட்டு உள்ள சிரமத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதையும், ஊரடங்கு காரணமாக சிலர் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் என்னால் உணர முடிகிறது. ஈரடங்கின்போது வீட்டிலேயே இருந்து நாட்டை காப்பாற்றிய மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ போல் செயல்பட்டு வருகின்றார்கள். இந்தியா மிக தைரியமாக கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கை சிறப்பான பாதையில் செல்கிறது. தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட விசேஷங்களை மக்கள் வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது இந்தியாவில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. மற்ற நாடுகளைவிட இந்தியா கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் இந்தியா எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
கொரோனாவை கட்டுப்பட்டுத்த மே 3ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும். எனவே மே 3ந் தேதி ஊரடங்கு முடிவடையும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த வாரம் என்பது கொரோனாவுக்கு எதிரான போரில் மிக முக்கியமானது. எனவே ஏப்ரல் 20 வரை ஊரடங்கை கடுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படும். ஊரடங்கை சரியாக பின்பற்றாவிட்டால் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.