நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு
- IndiaGlitz, [Friday,May 01 2020]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு உத்தரவும், ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. மத்திய அரசு பிறப்பித்த இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் அதாவது மே 3ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது ஒரு சில மாநிலங்களுக்கு தளர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை என்றும், பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் இருக்கும் என்றும், சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.