இந்தியாவில் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவா? அமெரிக்க நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Saturday,April 04 2020]
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இயல்பு நிலை திரும்பி விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ரயிலில் முன்பதிவு தொடங்கி விட்டதாகவும், ஒரு சில தனியார் விமான நிறுவனங்களும் முன்பதிவை தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் என்ற நிறுவனம் இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இந்திய சுகாதாரத் துறை மற்றும் இந்திய அரசின் செயல்பாட்டை பொறுத்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதற்கும் நீட்டிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் இந்தியாவில் ஜூன் மாதத்தில் மூன்றாவது வாரத்தில் தான் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்பதால் அந்நாட்டில் செப்டம்பர் மாதம் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் இந்தியாவில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிறுவனம் கூறுவதுபோல் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை விட பசியால் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902 ஆக உள்ளது என்பதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உள்ளது என்பதும் இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் மூன்றாவது ஸ்டேஜுக்கு போகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.