ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பில் என்னென்ன புதிய தளர்வுகள்?
- IndiaGlitz, [Thursday,July 30 2020]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறாம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாளையுடன் அந்த ஊரடங்கு முடிவடைகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது ஊரடங்கு விடுவிக்கப்படுமா என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது.
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மருத்துவ நிபுணர் குழுவினர்களுடன்ஆலோசனை நடத்தி வந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களுடன் நடத்திய ஆலோசனை நடத்திய பின்னரே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும் முதல்வரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
* காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி! முன்னதாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது
* சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி. சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு. சென்னையில் மற்ற கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு
* சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்
* ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி. ஆனால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள எந்த கோவில், மசூதி, தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை
* இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை! மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் கட்டாயம்!
* பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை. மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்
* திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்
* மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை தொடரும்
* பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்
* சுற்றுலா தலங்களுக்கு ,வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்!
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது