Download App

LKG Review

எல்.கே.ஜி திரைவிமர்சனம் - அரசியல் சதுரங்க ஆட்டம்

ஒரு வார்டு கவுன்சிலர் சிலபல உள்குத்து, நரித்தந்திரங்கள் செய்து ஒரு மாநிலத்தின் முதல்வராவது எப்படி என்ற இந்த ஒரு வரிக்கதையான எல்.கே.ஜி படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

லால்குடியில் உள்ள ஒரு வார்டு கவுன்சிலர் லால்குடி கருப்பையா காந்தி என்ற எல்.கே.ஜி (ஆர்.ஜே.பாலாஜி). உள்ளூர் மக்களிடம் பிரபலம் ஆக, அவர்களுக்கு சின்ன சின்ன உதவி செய்வது, அந்த உதவியை பெற பெரிய மனிதர்களை மிரட்டுவது என்று போகும் நிலையில், அவரது கட்சி தலைவரும் முதல்வருமானவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார். இரண்டாம் இடத்தில் உள்ளவர் முதல்வராக, கட்சியில் பிளவு ஏற்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் மரணம் அடைய அவரது தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் உள்ளூர் பிரபலம் ராமராஜ் பாண்டியன் (ஜே.கே.ரித்தீஷ்) முதல்வரின் எதிர்ப்பையும் மீறி போட்டியிடுகிறார். உள்ளூர் கவுன்சிலராக இருந்த எல்.கே.ஜி, சமூக வலைத்தளங்கள், மீம்ஸ் கிரியேட்டர்களின் உதவியால் டெல்லி வரை செல்வாக்கு பெற்றதால் கட்சி, அவரை இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கின்றது. பணபலம், தொகுதி முழுவதும் செல்வாக்கு மிகுந்த ராமராஜ் பாண்டியனை, ஒரு வார்டில் மட்டும் செல்வாக்குள்ள எல்.கே.ஜி, கார்ப்பரேட் நிறுவன அதிகாரி ப்ரியா ஆனந்த் உதவியால் எப்படி வெற்றி பெறுகிறார்? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.

ஹீரோக்களுடன் காமெடி செய்து கொண்டிருந்த ஆர்.ஜே.பாலாஜி, காமெடி நடிகர் மயில்சாமியை துணைக்கு வைத்து கொண்டு ஹீரோவாகியுள்ளார். தொகுதி மக்களுக்கு நன்மை செய்வது, உள்ளூர் பிரபலங்களை மிரட்டுவது, தற்போதைய அரசியல் டிரண்டிங்கை வைத்து காமெடி செய்வது, என தனது பணியை சரியாக செய்துள்ளார். ஆனால் சாதாரண காட்சியில் வசனம் பேசும்போதுகூட ஹைபிட்சில் கத்துவதுதான் ஏன் என்று தெரியவில்லை.

அரசியல் காமெடியாக போய்க்கொண்டிருந்த படம் ப்ரியா ஆனந்த் வந்த பின்னர்தான் சூடு பிடிக்கின்றது. எதிரியின் பலவீனம், வாடிக்கையாளரின் பலம், மக்களின் மனநிலை, என்ன செய்தால் என்ன நடக்கும் என்ற கணிப்பு என ப்ரியா ஆனந்த் கேரக்டர் தமிழ்ப்படங்களுக்கு புதிது. அவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். ஒரு அரசியல்வாதியின் தலையெழுத்தை கார்ப்பரேட் நிறுவனம் தான் தீர்மானிக்கின்றது என்பதை இவாரது கேரக்டர் மூலம் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது.

30 வருடமாக அரசியல் செய்தும் அரசியலில் ஜெயிக்க முடியாத அரசியல்வாதியாக நாஞ்சில் சம்பத். இவரை இயக்குனர் இன்னும் கொஞ்சம் அதிகம் பயன்படுத்தியிருக்கலாம். எந்த ஒரு தகப்பனும் தனது மகன் தோல்வி அடைய கூடாது என்று நினைப்பார் என்ற கிளைமாக்ஸ் காட்சியில் வசனம் பேசும்போது மட்டும் அவரது நடிப்பு தெரிகிறது.

ஜே.கே.ரித்தீஷ் கேரக்டர் இப்போதுள்ள ஒரு பிரபல அரசியல்வாதியை ஞாபகப்படுத்துகிறது. காமெடி மற்று வில்லத்தன நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

முதல்வர் வேடத்தில் நடித்திருகும் ராம்குமார், ஆர்.ஜே.பாலாஜியின் மாமாவாக நடித்திருகுக்கும் மயில்சாமி ஆகியோர்களின் நடிப்பும் ஓகே.

லியோ ஜேம்ஸ் இசையில் 'எத்தனை காலம் தான்' பாடல் மட்டும் கேட்கும் வகையில் உள்ளது. பின்னணி இசையும் கதைக்கேற்றவாறு அமைந்துள்ளது. எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், அந்தோணியின் படத்தொகுப்பும் ஓகே ரகம்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதிய ஆர்.ஜே.பாலாஜி மற்றும் அவரது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். நாம் சமீபகாலமாக பார்த்த பல அரசியல் நையாண்டி படங்களில் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்கவிட்ட ஜோக்குகள் தான் அதிகம் இருக்கும். அந்த தவறை செய்யாமல் அரசியல் நையாண்டி மட்டுமின்றி கொஞ்சம் சீரியஸாகவும் கதையை கொண்டு சென்றுள்ளார். இரண்டாம் பாதியில் ஆர்.ஜே.பாலாஜிக்கும், ரித்தீஷுக்கும் இடையே நடக்கும் அரசியல் ஆடுபுலி ஆட்டம் நல்ல விறுவிறுப்பு. கார்ப்பரேட் நிறுவனம் காசு கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வேலை செய்யும் என்பதை இரண்டு பக்கமும் காசு வாங்கி வேலை செய்யும் கார்ப்பரேட் நிறுவனம் மூலம் கூறி கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளனர். கடைசி ஐந்து நிமிடம் ஆர்.ஜே.பாலாஜி பேசும் வசனம் ஒவ்வொரு வாக்காளனையும் சிந்திக்க வைக்கும். ஒரு அரசியல்வாதி எந்த அளவுக்கு தவறு செய்கிறாரோ, அதே அளவு தவறை ஒவ்வொரு வாக்காளனும் செய்வதை கன்னத்தில் அரிந்தது போல் அடித்து கூறுகிறார்கள். இந்த நாட்டில் நல்லது எதுவும் செய்யாமல் நன்றாக பேசினாலே தலைவராகிவிடலாம் என்ற யதார்த்த உண்மையை மனதில் பதியும்படி எடுத்து கூறியுள்ளனர்.

அதேபோல் பாகுபடு இல்லாமல் ஒரு கட்சியையும் விடாமல் கலாய்த்துள்ளனர். அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களை மட்டுமின்றி மீடியா, மிம்ஸ் கிரியேட்டர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், என அனைத்து பந்திலும் சிக்ஸர் அடித்துள்ளார் இயக்குனர் பிரபு. இடையிடையே தல, தளபதி ரெஃப்ரன்ஸும் உண்டு. 

மொத்தத்தில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு அரசியல் படம் என்பதால் அரசியல் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

Rating : 2.8 / 5.0