பேக்கேஜ் செய்யப்பட்ட உணவில் கொரோனா வைரஸா? பதை பதைக்க வைக்கும் தகவல்!!!

 

சீனாவில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் இருந்ததாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து தற்போது பதப்படுத்தப்பட்ட உணவின் மேற்பரப்பில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டதாகப் புதிய தகவல் ஒன்று வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக சீனாவின் ஜிபிங் மாகாணத்தில் உள்ள ஜின்பாடி மொத்த விற்பனை சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கொரோனா வைரஸ் பரவியது. அதையடுத்து அங்கு வந்து செல்வோருக்கும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வாங்கி உண்ண வேண்டாம் என சீன அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். மேலும் அங்குள்ள கிங்டாவோ என்ற துறைமுக நகரத்திலும் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவத் தொடங்கியதாகத் தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து கிங்வாடா துறைமுகத்தில் பதப்படுத்தி உறைய வைக்கப்பட்ட உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் இருப்பதைத் தற்போது அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இந்தத் தகவல் சீனாவில் இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு உண்போருக்கு மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படி உணவுப்பொருள் பேக்கேஜிங்கின் மேற்பரப்பில் வாழும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது உலகிலேயே இதுதான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை சி.டி.சி எனும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது. சீனாவில் கடந்த ஜுலை மாதத்தில் ஒரு கண்டெய்னரின் உள்சுவரிலும் அங்குள்ள பேக்கேஜிங்கிலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து சீனாவில் உறைந்த இறால் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கிங்டாவா துறைமுகத்தில் பதப்படுத்தி உறைய வைக்கப்பட்டிருந்த உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் வாழும் நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் இந்த உணவுப் பொட்டலங்கள் எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் பேக்கேஜிங்கை தொடுகிறவர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.