டிக் டாக் மோகத்தால் குற்றவாளியுடன் ஊர் சுற்றிய சிறுமி...! தந்தையிடம் ஒப்படைப்பு....!
- IndiaGlitz, [Tuesday,August 24 2021]
வழிப்பறி செய்யும் குற்றவாளியோடு, இரவு நேரத்தில் ஊர் சுற்றி, டிக் டாக் வீடியோக்கள் செய்துகொண்டிருந்த சிறுமியை மீட்டு, போலீசார் தந்தையிடம் ஒப்படைத்தனர்.
அரும்பாக்கத்தில் உள்ள எம்எம்டிஏ காலனி ஏ பிளாக்கில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு காவலாளியாக வேலை பார்த்து வருபவர் தான் கோடீஸ்வரன். இவர் பள்ளி வளாகத்தில் இருக்கும் பேருந்தை எடுக்க சென்ற போது, அதனுள் 4 நபர்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர்களை பிடிக்க முயன்ற போது, அதில் உள்ள 3 நபர்கள் தப்பி ஓட, ஒரே ஒரு சிறுமி மட்டும் மாட்டிக்கொண்டுள்ளார். இச்சிறுமியை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் காவலாளி ஒப்படைத்தார்.
அந்த பெண்ணை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
சென்னையில் உள்ள ராயப்பேட்டை மீர்சாகிப் பேட்டையில், சாலை ஓரத்தில் தனது தந்தையுடன் வசித்து வருபவர் தான் இந்த 16 வயதுடைய சிறுமி. அங்கிருக்கும் போது ஆண் நண்பர்களான கார்த்திக், நிஜாம் மற்றும் தேவா உள்ளிட்டோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்ந்து கஞ்சா பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். நண்பர்களுடன் டிக் டாக் செய்வதற்காக ஈசிஆர் சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பி பள்ளியில் சுவர் ஏறி குதித்து, பள்ளிபேருந்தில் டிக் டாக் செய்து விட்டு அசந்து தூங்கியுள்ளனர். அப்போது காவலாளி கோடீஸ்வரன் வந்து பார்த்த போது, 3 பேரும் தப்பித்து ஓடி விட்டனர். பார்ப்பதற்கு ஆண்களைப் போலவே தோற்றம் இருப்பதால், சிறுமியை பலராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆண் நண்பர்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த போது, விருகம்பாக்கம் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கியுள்ளது இந்த கும்பல். காவல் துறையினர் விசாரணையில் தேவா மீது ஏற்கனவே வழக்கு இருப்பதும், அண்மையில் தான் நிபந்தனை ஜாமினில் வெளிவந்ததாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார், காலை மறுபடியும் ஷ்டேஷன் வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
கஞ்சா போதையில் தான் 4 பேரும் அங்கு தூங்கியதும், அவர்கள் சிறுமிக்கு எந்த பாலியல் தொந்தரவும் தரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதன்பின்பு சிறுமியின் தந்தையை அழைத்து விசாரணை நடத்தி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் அச்சிறுமி ஒப்படைக்கப்பட்டார். தப்பி ஓடிய மூவரை தீவிரமாக காவல் துறையினர் தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.