சாலைகளில் உறங்கும் சிங்கங்கள்!!!

  • IndiaGlitz, [Friday,April 17 2020]

 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளில் கூட தற்போது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், ஆப்பிரிக்காவில் உள்ள பல தேசியப் பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கின்றன. தென் ஆப்பிரிக்காவின் பழமையான Krugar தேசியப் பூங்கா, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

ஊருக்குள் ஆள் நடமாட்டம் குறைந்து இருப்பதால் உலகம் முழுவதும் பல இடங்களில் விலங்குகள் சுற்றித்திரியும் செய்திகளையும் பார்க்க முடியும். அதேபோல ஒரு சம்பவம் தென் ஆப்பிரிக்காவின் Krugar தேசியப் பூங்காவிலும் நடைபெற்று வருகிறது. தேசியப் பூங்காவிலுள்ள சிங்கங்கள் கொரோனா அளித்து இருக்கும் விடுமுறை நாட்களை சாலைகளில் படுத்து உறங்கி சுகமாகக் கழித்து வருகின்றன. இரவு நேரங்களில் சாலைகளின் ஓரங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சுற்றித்திரியும் இந்த தேசியப் பூங்காவின் சிங்கங்கள் தற்போது கெத்தாக சாலைகளில் படுத்துக்கொண்டு உறங்குகின்றன. மனிதர்களின் அட்டகாசம் இல்லாத பூமி இப்படித்தான் இருக்குமோ என்கிற ரீதியில் சோம்பலை முறித்துக்கொண்டு தூங்கிவழியும் இந்த சிங்கங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு சென்று வந்த 3 விஞ்ஞானிகள் இந்த உலகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவதாக கருத்துத் தெரிவித்து இருந்தனர். 3 மாதங்களுக்கு முன்னர் ஆராய்ச்சிக்காக இந்த 3 பேரும் விண்வெளிக்கு பயணம் செய்தனர். அப்போது இருந்த உலகம் பரபரப்பாக இருந்தது என்றும் தற்போது நிலைமையே வேறாக இருப்பதாகவும், இத்தனை அமைதியைத் தாங்கள் பார்த்ததே இல்லை என்றும் அந்த விஞ்ஞானிகள் வீடியோ வெளியிட்டு இருந்தனர். கொரோனாவின் தாக்கத்தால் உலகில் பெரும்பாலான இடங்கள் அமைதியாகவும் காற்று மாசிபாடில்லாமலும் இருக்கிறது என உலகச் சுகாதார மையமும் கருத்துத் தெரிவித்து இருக்கிறது.