ரெக்கார்ட் பிரேக்கிங் சாதனை படைத்த மெஸ்ஸி… ரசிகர்கள் வாழ்த்து!

சர்வதேச கால்பந்து சங்கக் கூட்டமைப்பான ஃபிபா ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றுள்ளார்.

கால்பந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றவர் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற 22 ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது நடப்பு சாம்பியன் அணியான பிரான்ஸை பெனால்டி ஷுட் அவுட் முறையில் மிகவும் சாதுர்யமாகத் தோற்கடித்தார். இதனால் மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வென்றது. இது உலக ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சிறந்த வீரருக்கான பட்டியல் வரிசையில் பிரான்சின் கைலியன் எம்பாப்வே மற்றும் கரின் பென்சியா ஆகியோர் இருந்த நிலையில் அவர்களை வீழ்த்திவிட்டு வாக்கெடுப்பு முறையில் 35 வயதான லியோனல் மெஸ்ஸி சிறந்த வீரருக்கான விருதைத் தட்டிச்சென்றுள்ளார். சென்ற ஆண்டும் இந்த விருதை மெஸ்ஸி வென்ற நிலையில் அவர் 7 ஆவது முறையாக ஃபிபா விருதைத் தட்டிச்சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான ஃபிபா விருதை வென்றுள்ளார்.

2022 – ஃபிபா விருது பட்டியல்

சிறந்த ஃபிபா மகளிர் வீராங்கனை - அலெக்ஸியா புட்டெல்லாஸ்

சிறந்த ஃபிபா ஆண்கள் வீரர் - லியோனல் மெஸ்ஸி

சிறந்த ஃபிபா மகளிர் பயிற்சியாளர் - சரினா வீக்மேன்

சிறந்த ஃபிபா ஆண்கள் பயிற்சியாளர் - லியோனல் ஸ்கலோனி

சிறந்த ஃபிபா மகளிர் கோல்கீப்பர் - மேரி ஏர்ப்ஸ்

சிறந்த ஃபிபா ஆண்கள் கோல் கீப்பர் - எமிலியானோ மார்டினெஸ்