தேம்பியழுத எதிர்அணி வீரர்… கட்டி அணைத்துத் தேற்றிய மெஸ்ஸி… இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!

47 ஆவது கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் பெற்று இருக்கிறது. இதனால் கோபா தென் அமெரிக்க கால்பந்து போட்டியில் 9 முறை வெற்றிக் கோப்பையை சூடிவந்த பிரேசில் அணி வெற்றிவாய்ப்பை நழுவவிட்டு இருக்கிறது.

தென் அமெரிக்க கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் கோபா கால்பந்து கோப்பை போட்டியில் 28 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றிக் கொப்பையைச் சூடி இருக்கிறது. இதனால் சர்வதேசப் போட்டிகளில் ஒருமுறைகூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்ற குற்றச்சாட்டில் இருந்து மெஸ்ஸி தப்பித்து இருக்கிறார்.

பிரேசில் நாட்டில் ரியோடிஜெனிரோ நகரில் உலகப் புகழ்ப்பெற்ற மரக்காணா அரங்கில் கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் பிரேசில் அணியை எதிர்த்து விளையாடிய அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் 22 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டிமரியா ஒருகோல் அடித்ததால் இது சாத்தியமானது. இதனால் வெற்றிவாய்ப்பை தவறவிட்ட பிரேசில் அணியின் மூத்த வீரர் நெய்மர் தரையில் மண்டியிட்டு அழத்துவங்கி விட்டார்.

இன்னொருபுறம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றிக் கோப்பையை சூடிய அர்ஜென்டினாவின் மெஸ்ஸி ஆனந்தக்கண்ணீர் சிந்தத் துவங்கி இருந்தார். இப்படியான சூழலில்தான் நெய்மரை, மெஸ்ஸி கட்டி அணைத்து நீண்ட நேரம் தேற்றிய நிகழ்வு நடைபெற்றது. இந்தக் காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.

34 வயதாகும் மெஸ்ஸி 28 ஆண்டுகளாக அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வருகிறார். 6 முறை சிறந்த சர்வதேச கால்பந்து விருதையும் பெற்றிருக்கிறார். ஆனால் ஒருமுறைகூட இவரது தலைமையில் அர்ஜென்டினா சர்வதேச கால்பந்து கோப்பையை வாங்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்த மெஸ்ஸி கோபா அமெரிக்க கால்பந்து கோப்பை போட்டியில் வெற்றிப்பெற்று கடந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.