20 வருடங்களுக்கு பின் லிங்குசாமி படத்தின் இரண்டாம் பாகம்: இதிலும் ஷட்டர் காட்சி இருக்குமா?
- IndiaGlitz, [Friday,March 25 2022]
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 20 வருடங்களுக்குப்பின் உருவாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இயக்குனர் லிங்குசாமி தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வரும் ’ தி வாரியர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லிங்குசாமி சகோதரரும் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான சுபாஷ் சந்திர போஸ் தனது சமூக வலைத்தளத்தில் ’ரன்’ படத்தின் பார்ட் 2 விரைவில்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதனை அடுத்து லிங்குசாமி இயக்கிய ’ரன்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ’ரன்’ படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சாக்லேட் பாயாக இருந்த மாதவனை இந்த படம் ஆக்ஷன் படமாக மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக மீரா ஜாஸ்மின் மீண்டும் சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ’ரன் 2’ படத்திலும் மாதவனுக்கு ஜோடியாக அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘ரன்’ படம் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது ஷட்டர் மூடும் காட்சிதான். அது போன்ற ஒரு மாஸ் காட்சி இந்த படத்திலும் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.