வடமாநிலங்களில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அவலம்!
- IndiaGlitz, [Tuesday,July 13 2021]
உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 77 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் படுகாயத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடமாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இரவு வரை கடும் மின்னல் தாக்கத்துடன் பலமணி நேரமாக கனமழை பெய்தது. இந்த மழைக்கு நடுவே பல இடங்களில் மின்னல் வெட்டு தாக்கி பலர் உயிரிழந்த அவலம் அரங்கேறி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள ஆம்பர் கோட்டையில் ஏராளாமான சுற்றுலா பயணிகள் இருந்தபோது அந்த கோட்டையின் மலை உச்சியில் உள்ள கண்காணிப்பு கேமரா மீது மின்னல் வெட்டு தாக்கி இருக்கிறது. இதனால் மலைகோபுரத்துக்கு செல்லும் பாதையில் இருந்த 70 க்கும் மேற்பட்டோர் மீது மின்னல் கடுமையாகத் தாக்கி அதே இடத்தில் 11 பேர் உடல்கருகி இறந்துபோன சம்பவம் கடும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் மின்னல் வெட்டு தாக்கியதால் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் கோபுரத்தின் மீதிருந்து கீழே விழுந்து உள்ளனர். இதனால் பலர் படுகாயங்களுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தை தவிர அதே மாநிலத்தில் மேலும் 12 பேர் மின்னல் வெட்டு தாக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பிரயாக்ராஜ், கான்பூர், பதேபூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழை பெய்ததை அடுத்து அங்கும் பல இடங்களில் மின்னல் வெட்டுத் தாக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மின்னல்வெட்டு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மத்தியப்பிரதேசத்தின் குவாலியர், சிவபுரி, பெதுல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையுடன் மின்னல்வெட்டு தாக்கியதால் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இதனால் உத்திரபிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் ஒரே நாளில் 77 பேர் இதுவரை உயிரிழந்து இருப்பது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த மழையால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தும் வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாநிலங்களைத் தவிர காஷ்மீர், இமாச்சல், உத்திரகாண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு, போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு மக்கள் கடும் அவதியுற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.