டிஐஜி ரூபா மீது ரூ.20 கோடி அவமதிப்பு வழக்கு
- IndiaGlitz, [Tuesday,November 28 2017]
பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், இதில் ரூ.2 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டிருப்பதாகவும் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராண ராவ் மீது, பெங்களூர் சிறைத்துறை டிஐஜி ஆக பணிபுரிந்த ரூபா ஐபிஎஸ் அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதனை கடுமையாக மறுத்த கர்நாடக மாநில சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா மீது அவமதிப்பு வழக்கு ஒன்றை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இதன்படி தன்மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறிய டிஐஜி ரூபா, தனக்கு நஷ்ட ஈடாக ரூ.20 கோடி தர உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட பெங்களூரு நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து டிசம்பர் 16ஆம் தேதிக்குள் ரூபா பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
தன்மீது பதிவு செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கு குறித்து டிஐஜி ரூபா கூறுகையில், 'ரூ.20 கோடி நஷ்ட ஈடு கேட்டு என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருப்பது அடிப்படை ஆதாரமற்றது' என்று கூறியுள்ளார்.