8 தோட்டாக்கள் இயக்குனரை மகனாக ஏற்றுக்கொண்டேன். பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Sunday,April 09 2017]

சமீபத்தில் வெளியான அறிமுக இயக்குனரும், மிஷ்கின் உதவியாளருமான ஸ்ரீகணேஷ் இயக்கிய '8 தோட்டாக்கள்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் நல்லாதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படத்தில் மூர்த்தி என்ற அருமையான கேரக்டரில் நடித்த பிரபல குணசித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், இந்த படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் அளித்த இயக்குனருக்கு நன்றி கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இயக்குனர் ஸ்ரீகணேஷ தனது மகனாக ஏற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

இவரை முதலில் பார்த்த போது, என் மகனுடைய நண்பனோ என்று நினைத்தேன். இல்லை, நான்தான் புரொடக்ஷன் மேனேஜர் நாகராஜ் சொன்ன இயக்குனர் ஸ்ரீகணேஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

முதலில் நான் அவருக்கு சொன்ன அட்வைஸ், உடம்பை தேத்துங்க தம்பி, என்று. ஆனால், அவர் சொன்ன கதையும் என் கதாப்பாத்திரமும், அந்த இளைஞர் சொன்ன விதத்தில், உடல் பலத்தைவிட தன்னுடைய மூளை பலம் அதிகம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். சொன்னது போலவே படத்தையும் அருமையாக எடுத்து, எனக்கும், அதில் நடித்த எல்லோருக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுத்து, எல்லோரது மனதிலும் நின்றுவிட்டார்.

என் மகனாக நான் ஏற்றுக் கொண்ட அந்த இளைஞனுக்கு, மேலும் கற்பனை வளத்தையும், நிறைய படங்களையும் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

படத்தில் பங்கேற்ற நடிகர் சங்க தலைவர், என்னுடைய மாமா, திரு.நாசர் அவர்களுக்கும், படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த ஐயா திரு. மு.வெள்ளைப்பாண்டி அவர்களுக்கும், அவரது மகன், கதாநாயகன் வெற்றி அவர்களுக்கும்,லைன் புரொடியூசர் கார்த்திக் அவர்களுக்கும், அருமை சகோதரர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அவர்களுக்கும்,எங்களை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தமிழ் ரசிக பெருமக்களுக்கும், மற்றும் இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்கள், படக் குழுவினர் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எம்.எஸ்பாஸ்கர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.