கொரோனா நேரத்தில் நினைவுகூருவோம்; இன்னும் சரிசெய்யப்படாத போபால் அணுவுலை வெடிப்பின் கோரங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த நூற்றாண்டில் இந்தியா சந்தித்த பெரும் பேரழிவு போபால் அணுவுலை வெடிப்பு. இதன் விளைவுகளையே இன்னும் இந்தியாவில் சரிச்செய்யப்படாத நிலையில் கொரோனா வந்து தாக்கிக்கொண்டிருக்கிறது. அணு என்றாலே ஹிரோஷிமா, நாகசாகி மட்டுமே நமக்கு நினைவுக்குவரும். இதற்குச் சற்றும் குறைவில்லாத ஒரு நிகழ்ச்சி நம்நாட்டில் அரங்கேறியிருக்கிறது. கொரோனா பரவி வரும் வேளையில் போபாலை எதிர்க்கொண்ட விதமும் அதற்கு நாம் கொடுத்த விலையையும் சற்று நினைவு கூர்ந்து பார்ப்பது அவசியம். ஒருவேளை அந்தவிளைவுகள் கொரோனா நோய்த்தொற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்யலாம்.
இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு இரசாயனக் கூடத்தில் வெளியேறிய விஷவாயுத் தாக்குதலின் கோர விபத்தினைப் பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முழுமையாக தெரிவதில்லை. அமெரிக்காவின் யூனியன் கார்பைடு (Union carbide Corporation) உதவியால் 1981 இல் பூச்சிக்கொல்லி (Pesticide) தயாரிக்கும் இராசாயனக் கூடம் ஒன்று மத்தியப்பிரதேசத் தலைநகர் போபாலில் நிறுவப்பட்டது. அதில் அமெரிக்க யூனியன் கார்பைட்டுக்கு 51% பங்கும் இந்திய அரசுக்கு 26% பங்கும் சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றுமுள்ள பங்குகள் இந்தியர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இந்த ஆலையில் பூச்சிக்கொல்லிக்குத் தேவையான மிக் (Methyl Isocyanate) (MIC) இரசாயனத்தை உருவாக்கினார்கள். மேலும், அதனைச் சேமித்து வைக்கும் கிடங்குகளும் இங்குதான் அமைக்கப்பட்டு இருந்தன.
இப்படி தயாரிக்கப்படும் MIC க்குடன் கார்பன் டெட்ராகுளோரைடு (Carbon Tetrachloride) மற்றும் ஆல்ஃபா நாஃப்தால் (Alpha – Naphthol) இரண்டையும் சேர்த்து பூச்சிக்கொல்லி மருந்தை தயாரிக்கிறார்கள். மிக் இரசாயனம் மிகவும் வீரியமானது. கொடிய விஷத்தன்மை [Highly Toxic] கொண்டது. மேலும், நீருடன் கலக்கப்படும்போது இது தீவிர வெப்பத்தை வெளியேற்றக்கூடியதாக இருக்கும். இந்த மிக்கை குறித்து [Violent Exothermic Reaction] யூனியன் கார்பைடு இயக்க நெறி நூலில், ‘தோல், கண்கள், நுரையீரல்கள் ஆகியவற்றில் தீவிர எரிச்சல் ஊட்டி, [Fatal Pulmonary Edema] மிக் மரண மூட்டும் விஷ இரசாயனம்’ என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
1984 ஆம் வருடம் டிசம்பர் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தான் இந்தப்பேரழிவு நடந்தது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் இரண்டாவம் ஷிப்ட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். வழக்கமாக தயாரிக்கப்படும் மிக்கை சேமித்து வைக்க E610, E611, E619 என மூன்று பெரிய உலைகள் இந்நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொன்றும் 15 ஆயிரம் கொள்திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த மூன்றில் கண்டிப்பாக ஒரு உலை காலியாக வைக்கப்பட வேண்டும் என்பது நிறுவனத்தின் விதிமுறை. ஆனால் அன்றைக்கு அந்த மூன்று உலைகளும் மிக் திரவத்தால் நிரம்பி வழிந்தன.
இரண்டாவது ஷிப்டில் வேலைப்பார்க்கும் ஒரு தொழிலாளி மிக் உலையில் உள்ள வால்வுகளை சுத்தம் செய்ய முற்படுகிறார். வழக்கமாக சுத்தம் செய்யும் போது ஒரு வட்டவடிவமான தட்டை வைத்து மிக் உலையை முழுவதுமாக மூடவேண்டும். ஒருவேளை தண்ணீர் படும்போது மிக் திரவத்தின்மீது பட்டுவிட்டால் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். ஆனால் அந்தத் தொழிலாளி மிகச்சாதாரணமாக வால்வுகளை நீர்க்குழாயோடு இணைத்து சுத்தம் செய்யமுற்படுகிறார். வட்ட வடிவத் தட்டு எதுவும் வைக்கப்படவில்லை. காலியாக இருக்க வேண்டிய கலன் 13 ஆயிரம் மிக் திரவத்தோடு நிரம்பிவழிகிறது. நீர் கொஞ்சம் கொஞ்சமாக மிக்குடன் கலக்கப்படுகிறது. இந்த மாற்றத்தை எதையும் உணராத தொழிலாளி தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.
போபால் நகரத்தில் மட்டும் 9 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இரவு 9.30 மணிக்கு இந்நிகழ்வு நடக்கிறது. 10.30 மணிக்கு இரண்டாவது ஷிப்ட் முடிந்து தொழிலாளிகள் வீட்டுக்குச் செல்லவேண்டிய நேரம் வருகிறது. இரவு 10.30 மணிக்கு கொல்கலனின் அழுத்தம் 2Psi ஆக இருக்கிறது. 11. 30 மணிக்கு இந்த அழுத்தம் 10 Psi ஆக மாறும்போது தான் பக்கத்தில் இருப்பவர்கள் ஏதோ தப்பு நடக்கிறது எனப்புரிந்து கொள்கின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த தொழிலாளிகள் போராடிக்கொண்டிருக்கும்போது 12.40 மணிக்கு 40 Psi ஆக மாறிவிடுகிறது. அபாயச் சங்கை ஒலிக்கிறார்கள்.
வழக்கமாக எழுப்பும் மணி ஒலிக்கும், அபாய ஒலிக்கும் வித்தியாசத்தை உணராத மக்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். அழுத்தம் அதிகமாகி பெரும் புகையாக கிளம்புகிறது. 120 அடி உயரத்தில் உள்ள புகைப்போக்கி நிரம்பி பெரும் கரும்புகையாக வெளிவருகிறது. தொழிலாளர்கள் நிலைமை கைமீறி போவதை உணருகின்றனர். யாரை எச்சரிப்பது? யாரிடம் சொல்வது? யாரைக் காப்பாற்றுவது? முதலில் நாம் எப்படி பிழைக்கப்போகிறோம்? எதுவும் புரியாமல் விழிப்பிதுங்கி அங்கும் இங்கும் அல்லாடுகின்றனர்.
புகைப்போக்கி வழியாக வெளியேறிய மிக் காற்றைவிட அதிகமான எடைக்கொண்டது. எனவே புகையில் இருந்து வானை நோக்கிப் பாயாமால் தாழ்ந்து தரையை நோக்கித்தான் செல்கிறது. சரியாக 1.30 மணிக்கு போபால் நகரம் முழுக்க மிக் திரவம் நிரம்பி மக்களின் சுவாச மூச்சை நிறுத்துகிறது. கடுமையான நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்றவற்றால் மக்கள் திணறுகின்றனர். என்ன புகை இது? எங்கிருந்து வருகிறது? என்பதைக்கூட அறியாத பலர் குழப்பத்தில் தத்தளிக்கின்றனர். தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ள முடியாத பலர் அப்படியே இறந்துபோகின்றனர். அணுவுலை கசிவுக்குப் பின் நடத்தப்பட்ட ஆய்வில் போபால் நகரம் முழுவதும் 40 டன் மிக் கலந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. அத்தனை திரவமும் மக்களின் சுவாச உறுப்புகளைப் பதம் பார்த்திருக்கும்.
உடனடியான பாதிப்பில் மட்டும் 4 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கசிவிற்குப் பின்னர் 4 லட்சம் மக்கள் தங்களது உறுப்புகளை இழக்கவேண்டிய அவலம் ஏற்பட்டது. முதல் தலைமுறை குழந்தைகள் அனைத்தும் உடல் உறுப்பு சிதைந்த நிலையிலே பிறந்தன. இங்க வசித்த பெண்கள் அதிகபடியான கருச்சிதைவினை சந்தித்தனர். தாய்ப்பால் கூட பாதரசமும், ஈயமும் கலந்து இருந்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.
முதல் தவறு அபாயகரமான MIC இரசாயனத்தைத் தயாரிக்கும் நிறுவனம் பொதுவெளியில் மக்களுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தாமல் இயக்கியதுதான். அங்கு வேலைப்பார்க்கும் தொழிலாளர்களுக்கே அந்த இராசயனத்தைப் பற்றிய முழுவிவரங்களும் தெரியாமல் இருந்திருக்கிறது. மேலும், தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருந்திருக்கிறது. முழுமையான பராமரிப்புகள் இல்லாமல் அடிப்படையான தொழில்நுட்பங்கள் இல்லாமல் தொழிற்சாலை செயல்பட்டு இருக்கிறது. இத்தகைய காரணங்களால் தான் அணுவுலை கசிவு ஏற்பட்டு இருக்கிறது. அணுவுலை கசிவுக்குப் பின் நடந்த ஆராய்ச்சிகளும் இப்படித்தான் அறிக்கை வெளியிட்டு இருந்தன.
அணுவுலை கசிவு குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பில் தொழிலாளியின் கவனக்குறைப்பு என இந்திய நீதிமன்றம் முடித்து வைத்தது. உண்மையில் அணுவுலையில் பாதுகாப்பு உபகரணங்கள் பாராமரிப்புகள் சரிவர இருந்திருந்தால் தவறு ஏற்பட்டாலும் அதைச் சரிசெய்திருக்க முடியும். அடிப்படையே தவறாக இருக்கும்போது தொழிலாளியை எப்படி குற்றம்சாட்ட முடியும் என ஒருவரும் கேள்வியெழுப்பவில்லை என்பதே நிதர்சனம். வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதன் விளைவு இன்று வரலாற்று சுவடுகளில் கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. இந்த விபத்தினால் நேரடியாக உயிரிழந்தவர்கள் மட்டுமல்லாது இதுவரை 5 லட்சம் நபர்கள் அதன் உபகாரணங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று வரை இந்த மண்ணில் பிறந்த குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு உடல்நலக்குறைவு இருக்கத்தான் செய்கிறது.
போபால் அணுவுலை கசிவு நடந்தபோது அமெரிக்க யூனியன் கார்பைட் நிறுவனத்தின் செயல் தலைவர் வாரன் ஆண்டர்சன் பத்திரமாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது நடந்த விசாரணைக்குக் கூட அவர் வரவில்லை என்று குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
போபால் அணுகசிவில் பாதிக்கப்பட்ட நபர்கள் சொல்லும் முதல் குற்றச்சாட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதுதான். 9 லட்சம் வாழ்ந்த பெரிய நகரத்தில் ஒரு பெரிய அணு உலை கசிவு. உண்மையில் அரசாங்கம் உடனடியாக எவ்வளவு பேரைக் காப்பாற்றும். இதே நிலைமைதான் ஒவ்வொரு கொள்ளைநோயிலும் ஏற்படுகிறது. போபால் விஷவாயு வெளியேற்றத்தில் நேரடியான பாதிப்புகள் மட்டுமல்லாமல 5 லட்சம் மக்கள் இன்று வரை உடல் உறுப்புகளாலும் பிறப்பு குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ மற்றும் நிவாரண உதவிகளோ கொடுக்கப்படவில்லை என்பது அடுத்தக் குற்றச்சாட்டு.
நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பின் 1989 பிப்ரவரி 24 இல் அமெரிக்க யூனியன் கார்பரேட் நிறுவனம் நிவாரணத் தொகையாக இந்தியாவிற்கு 470 மில்லியன் வழங்கியது. இது 5 லட்சம் பேருக்கு நிவாரணத் தொகை என்று கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2002 இல் இந்திய நீதிமன்றம் இந்த வழக்கை தொழிலாளியின் அலட்சியத்தால் நடந்த பேரழிவு என முடித்து வைத்தது.
எந்தவொரு பேரழிவும் கொள்ளை நோயும் நேடியான பாதிப்பு மக்களைத் தான் வந்தடைகிறது. ஒரு மனிதத் தவறு அது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான பேரழிவாக கடைசியில் வந்து நிற்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம். மனிதன் தன்னைத்தானே பாதுகாத்து கொள்வதற்காக முதலில் சமூகத்தையும் சுற்றுவட்டாரத்தையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments