பத்மநாப சுவாமி கோவிலின் ரூ.1 லட்சம் கோடி பொக்கிஷங்கள் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 28 2018]

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவில் தங்க பொக்கிஷங்கள் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி வந்ததால் ஒரே நாளில் உலகின் மிகப்பெரிய பணக்கார தெய்வமாக பத்மநாப சுவாமி பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் வரலாறு காணாத இயற்கை பேரிடர் சமீபத்தில் ஏற்பட்டு அதனால் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் தனியார்கள் கொடுத்த நிவாரண நிதி இன்னும் ரூ.800 கோடியை கூட எட்டவில்லை

இந்த நிலையில் பத்மநாபசுவாமி கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் நகைகள், விலைமதிக்க முடியாத பொக்கிஷயங்களை வெள்ள நிவாரணத்திற்கு பயன்படுத்தலாம் என பேச்சு பொதுமக்களிடமும் சமூக இணையதளங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இதுகுறித்து திருவிதாங்கூர் மன்னரிடம் கேட்கப்பட்டபோது, 'இந்த பொக்கிஷங்களை வெள்ள நிவாரணத்திற்கு பயன்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் தான் முடிவெடுக்க வேண்டும். இதுகுறித்து கேரள அரசு எங்களிடம் கருத்து கேட்டால் நாங்கள் எங்களின் நிலைப்பாட்டை கூற தயார். அவசர காலத்துக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளவே இந்த பொக்கிஷங்கள் வைக்கப்பட்டு உள்ளதாக எங்கள் முன்னோர்கள் எங்களிடம் கூறியுள்ளனர் என்று மன்னர் தெரிவித்துள்ளார்.

எனவே கையில் வெண்ணையை வைத்து கொண்டு நெய்யுக்கு அலையாமல் இந்த பொக்கிஷத்தை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் நிவாரண பணியை செய்து கடவுளின் தேசமான கேரளாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அம்மாநில மக்களின் விருப்பமாக உள்ளது.