கால்பந்து கிங் மெஸ்ஸி விளையாடப்போகும் அடுத்த அணி? சம்பளம் எவ்வளவு தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,August 11 2021] Sports News
பார்சிலோனா கிளப் அணியில் இருந்து பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சமீபத்தில் விலகினார். இதற்கு நிதி மற்றும் கட்டமைப்பு விதிமுறைகள் காரணமாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் (பி.எஸ்.ஜி) எனும் அணிக்காக விளையாட உள்ளார் எனும் தகவல் வெளியாகி இருக்கிறது.
13 வயதில் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாட துவங்கிய லியோனல் மெஸ்ஸி கடந்த 2004 ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் பார்சிலோனா அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தம் 21 ஆண்டுகளைக் கடந்த நிலையில் சென்ற மாதம் முடிவிற்கு வந்தது. மேலும் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி இதுவரை 682 கோல்களை அடித்துள்ளார். அதோடு தான் கலந்துகொண்ட 16 சீசன் போட்டிகளில் 36 கிளப் கோப்பைகளை அவர் வென்று குவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் பார்சிலோனா அணியில் மெஸ்ஸி இணைந்து விளையாடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக மெஸ்ஸி தன்னுடைய 50% சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால் பார்சிலோனா கிளப் அணியின் மோசமான நிதிநிலை காரணமாகவும் கட்டமைப்பு விதிமுறைகள் காரணமாகவும் இந்த இணைப்பு நடைபெறாமலே போனது.
இதனால் பார்சிலோனா அணியில் இனிமேல் மெஸ்ஸி விளையாடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. இதையடுத்து நடைபெற்ற ஃபேர்வெல் கூட்டத்தில் மெஸ்ஸி பார்சிலோனா அணியுடன் தனக்கு இருந்த பிணைப்பை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். இதைப் பார்த்த கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் மெஸ்ஸிக்காக வருத்தம் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் 34 வயதாகும் மெஸ்ஸி அடுத்து யாருடன் கைக்கோர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டது. இதற்காக 2 அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் எனும் அணியில் இணைந்து விளையாட மெஸ்ஸி ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் இதில் விளையாடும் ஒவ்வொரு சீசனுக்கும் மெஸ்ஸிக்கு 35 மில்லியன் டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. கால்பந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து விலகியதை நினைத்து வருத்தம் தெரிவித்து வந்தனர்.
தற்போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாரிஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் எனும் அணிக்காக விளையாட உள்ளார் எனும் தகவல் வெளியாகி இருப்பதை அடுத்து பலரும் மகிழ்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.