அரசுக்கு நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது. நடிகர் சிவகுமார்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவாக இயற்றப்பட்டுவிட்டதால் மாணவர்களின் இத்தனை நாள் அறவழி போராட்டம் முழுவெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மெரினாவில் உள்ள மாணவர்கள் போராட்டத்தை முடித்து கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு ஜல்லிகட்டு ஆர்வலர்கள், திரையுலகினர், வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், ஆகியோர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பழம்பெரும் நடிகர் சிவகுமார் மாணவர்களுக்கு தனது வேண்டுகோளை அறிக்கை ஒன்றின்மூலம் விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

என் கண்ணின் மணிகளான மாணவமணிகளே ! ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சரித்திரம் படைத்து விட்டீர்கள். பெருமிதத்தில் என் நெஞ்சம் நெகிழ்கிறது. 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் ஓவியக்கல்லூரியில் சக மாணவர்களோடு நான் உண்ணா விரதமிருந்த அந்தப் பொன்னாளை நினைவுபடுத்தியது உங்கள் அறவழிப் போராட்டம்.

அவசரச் சட்டம் பிறப்பித்து விட்டனர். மத்திய அரசும் நம் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஆவனசெய்யும் என்று நம்புவோம். இதுவே மிகப்பெரிய வெற்றி. இதுவரை தன்னெழுச்சியாக நடந்து உலகையே திரும்பி பார்க்க வைத்த அறப்போராட்டம் வன்முறை நோக்கி திசை மாறக்கூடாது. இதுவரை எந்த அரசியல்வாதியின் ஆதரவு இல்லாமல், உச்ச நட்சத்திரங்களின் கடைக்கண்பார்வை இல்லாமல், நீங்கள் பெற்ற சரித்திர வெற்றி இது.

அரசுக்கு நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது. அவர்களுக்குக் கால அவகாசம் கொடுத்து, இத்துடன் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடும்படி வேண்டுகிறேன். உங்களுக்குத்தெரியும் முதல்வராக காமராஜர் இருந்த காலம் தொட்டு சென்னையில் இருப்பவன் நான். எந்த அரசியல் சார்பும் இன்றுவரை இல்லாதவன். என்வேண்டுகோளையும் ஏற்று போராட்டத்தை இத்துடன் தற்காலிகமாக கைவிட்டு உங்கள் பணியைத்தொடர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .