விவசாயிகளுக்கு வழங்கும் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் சட்டரீதியான நடவடிக்கை- தமிழக முதல்வர் அதிரடி!!!

 

இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் (PM-Kissan) திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கிசான் நிதியில் 110 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. அதையடுத்து தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2018 இல் சிறு,குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை (PM-Kissan) மத்திய அரசு தொடங்கி வைத்தது. முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் அமல்படுத்த இத்திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு கிளம்பியது. விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டப் பட்டியலில் போலி விவசாயிகளை இணைத்து கோடிக் கணக்கான ரூபாய் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முறைகேடான வழிகளில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து மீண்டும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த முறைகேட்டில் தமிழகத்தைச் சார்ந்த வேளாண்துறை அதிகாரிகள் பலர் ஈடுபட்டு இருப்பதாகவும் பரபரப்பு புகார் கூறப்பட்டது. இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாகவும் சிலர் விமர்சனம் தெரிவித்து வந்தனர். அதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என்று தமிழக முதல்வர் உறுதியளித்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது 80 க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக வேளாண் துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கிசான் திட்டம் என்பது அனைத்து வகையான விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாய், நான்கு தவணையாக பிரித்து வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் துறை, வருவாய் துறையினர் தகுதியான விவசாயிகளை கணக்கெடுப்பு நடத்தி திட்டத்தில் இணைத்தனர். இதில் பல்வேறு வழிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. முதல்கட்டமாக நடந்த ஆய்வில் 13 மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது தெரியவந்து இருக்கிறது. இதில் இதுவரை 110 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து “கிசான் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. கணிப்பொறி மேலாளர்கள் உள்ளிட்ட 80 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறோம். விவசாயிகளின் பெயர்களைப் பதிவேற்றும் உரிமம் தனியாருக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தனியார் முகவர்கள் போலியான பெயர்களைப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு இருக்கின்றனர்” என்று வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டு இருக்கிறார்.