கொரோனா வைரஸோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்: கைவிரித்த WHO!!!
- IndiaGlitz, [Thursday,May 14 2020]
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை அடியோடு ஒழிக்க முடியாது, அதோடு வாழ்வது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என உலகச் சுகாதார நிறுவனம் கருத்து தெரிவித்து இருக்கிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் சுகாதார மேம்பாடு, நோய் பரவும் தன்மை, பொருளாதாரம் போன்ற பல வழிகாட்டுதல்களை மேற்கொண்டு வந்த உலகச் சுகாதார நிறுவனம் தற்போது ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது.
”கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது. அது எப்போது நம்மை விட்டு விலகும் என்பதையும் நம்மால் கணிக்க முடியாது. உயிர்க்கொல்லி வைரஸான HIV வைரஸ் நோய்த்தொற்று போல கொரோனாவும் நம்முடனே இருக்கும். மேலும் இது நீண்ட காலத்திற்குப் பிரச்சனையை ஏற்படுத்தவும் செய்யலாம்” என உலகச் சுகாதார இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கருத்து தெரிவித்து இருக்கிறார். முன்னதாக உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை கொரோனா வைரஸ் ஏற்படுத்தும். எனவே தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்ட உலகச் சுகாதார நிறுவனம் தற்போது வைரஸோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸ் உச்சக் கட்டப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் WHO இந்தக் கருத்துகளை வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக “வைரஸோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்” என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் லவ் அகர்வால் பேசியது பற்றிக் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. இக்கருத்து அரசின் அலட்சியப் போக்கை காட்டுவதாக இருக்கிறது எனவும் கூறப்பட்ட நிலையில் தற்போது உலகச் சுகாதாரமும் இதே கருத்தைக் கூறியிருக்கிறது. இதன் மூலம் கொரோனா வைரஸை எதிர்க்கொள்ளும் அணுகுமுறையை இந்தியா மாற்றியிருக்கிறது என சில விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.