கன்னடம் தெரியாவிட்டால் வேலை காலி: புதிய அறிவிப்பால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி
- IndiaGlitz, [Tuesday,August 08 2017]
கர்நாடக மாநிலத்தில் உள்ள வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை பழகாவிட்டால் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்ற அறிவிப்பு வங்கி ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நடைமுறை கர்நாடகாவில் உள்ள தேசிய, தனியார் மற்றும் கிராம வங்கிகளிலும் கடைபிடிக்கப்படவுள்ளதாகவும், ஊழியர்கள் கன்னட மொழியை தெரிந்து கொள்வது கட்டாயமாக்கப்படுவதாகவும் கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் சேர்மன் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் கன்னட மொழியை மட்டுமே தெரிந்திருப்பதாகவும், அவர்களுக்கு திருப்தியான முறையில் சேவை செய்ய வேண்டுமானால் வங்கி ஊழியர்களுக்கு நிச்சயம் கன்னடம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக இருப்பதாகவும், இதனை கருத்தில் கொண்டே இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சித்தராமையா மேலும் கூறியுள்ளார்.
வங்கி ஊழியர்கள் கன்னடம் கற்க வங்கியே சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்யும் என்றும் ஆறு மாதத்தில் கன்னடம் கற்காதவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் நிலை வரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வங்கி விண்ணப்பங்கள் மற்றும் செலான்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பதாகவும், இவற்றில் கன்னடமும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது கிராமப்புற வங்கிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று சித்தராமையா மேலும் கூறியுள்ளார்.
ஒரு மாநிலத்தின் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய அந்த மாநிலத்தின் மொழியை வங்கி ஊழியர்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும், இதே நடைமுறை வங்கியில் மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.