ஆளுமை மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி… ஜே.பி.நட்டா புகழாராம்!!!

  • IndiaGlitz, [Friday,January 15 2021]

 

ஆளுமை மிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து இருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா புகழாரம் சூட்டியுள்ளார். பாஜகவின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா பொங்கல் விழா மற்றும் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார்.

அந்த விழாவில் பேசிய அவர், “மிக சிறந்த கலாச்சாரத்திற்கு தமிழகத்தில் வித்திட்டவர் திருவள்ளுவர். சோ ராமசாமி என்றால் துக்ளக். துக்ளக் என்றால் சோ.ராமசாமி. வெற்றிகரமாக சோ.ராமசாமி வழியில் துக்ளக் பத்திரிக்கையை குருமூர்த்தி நடத்தி வருகிறார். மோடி அவர்களின் திட்டங்கள் கூட்டாச்சி திட்டம் தமிழகத்தில் நல்ல பலன்களைப் பார்க்க முடிகிறது. 2014 ஆண்டுக்கு முன்பு தேசிய வங்கிகள் வந்துவிட்டது. ஆனால் வெறும் 3 கோடி இந்தியர்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர். ஆனால் தற்போது 40 கோடி இந்தியர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள். நேரடியாக அரசின் நிதி மக்களின் வங்கி கணக்கை சென்றடைகிறது.

விவசாயிகளின் பிரச்சனையை எதிர் கட்சிகள் முன் வைக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சி தேர்தல் அறிக்கையில் இதே வேளாண் சட்டத் திருத்தத்தை வாக்குறுதியாக கொடுத்து உள்ளனர். தற்போது தேர்தல் காலம் நெருங்கி விட்டது. பல மாநிலங்களில் பாஜக வலுவான கட்சியாக உருவெடுத்து உள்ளது. மக்கள் அனைவரும் மோடியுடன் நிற்கிறார்கள். அதை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம். பிற மாநிலத்தில் பெற்ற வெற்றிகள் பாஜக தமிழகத்திலும் பெற வேண்டும். இங்கு இருக்கக்கூடிய மாநிலத் தலைவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.

வளர்ச்சியை நோக்கி தமிழகம் முன்னெடுத்து செல்வதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். தமிழகத்தில் வரும் காலத்தில் பாஜக ஆட்சி அமையும். அதனால் தான் பல்வேறு துறையினர் பாஜகவில் இணைகின்றனர். ஆளுமைமிக்க தலைவர் மறைந்த பின்னரும் முதல்வர் பழனிசாமி ஆட்சியை தக்க வைத்திருப்பது அவரது ஆளுமையை காட்டுகிறது. இது எனக்கே ஆச்சரியமாக உள்ளது” எனத் தெரிவித்து உள்ளார்.