இரட்டைக் குழல் துப்பாக்கி போல அதிரடி காட்டும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்!!!

  • IndiaGlitz, [Friday,January 15 2021]

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பு சூடு பிடித்து இருக்கிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் களத்தில் ஒன்றாகச் சேர்ந்து அதிரடி காட்டி வருகின்றனர். இரட்டை குழல் துப்பாக்கியில் இரண்டு குழல் இருந்தாலும் இலக்கு ஒன்றுதான் என்பதுபோல இவர்கள் இருவரின் இலக்கும் அதிமுக வெற்றி என்ற ஒன்றை இலக்கை நோக்கியதாக இருக்கிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

முன்னதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் தூத்துக்குடி பகுதியில் ஒரே வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர்களின் இந்தச் செயல் தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல அதிமுகப் பொதுக்குழு எனப் பல மேடைகளில் ஒன்றாக இருந்து வேலைச் செய்து வருகின்றனர். வருகிற எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி இருவரும் எம்ஜிஅர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் தயாராக உள்ளனர். இவ்வாறு இருவரின் செயல்பாடுகளும் சமீபகாலமாக ஒருமித்து காணப்படுகிறது.

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையில் சர்ச்சை இருப்பதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என சில அதிமுக தொண்டர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த கருத்துகள் அனைத்துமே வதந்திகள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின் நடந்த அரசியல் நிழ்வுகளினால் இருவருக்கும் இடையில் ஆழமான பிளவு இருந்து வருவதாகக் கூறப்பட்டது. அதேபோல முதல்வர் வேட்பாளராக யார் இருப்பார் என்பதும் தற்போதைய அளவில் சர்ச்சைக்குரியதாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

ஆனால் இத்தகைய சலசலப்புக்கு இடம் தராமல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ், அனைத்து உறுப்பினர்களின் ஒருமனதோடு தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்த முடிவிற்கு ஓபிஎஸ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த முடிவும் அவரது தலைமையில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற சில செயல்பாடுகள் தற்போது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரிதும் பூரிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் ஈபிஎஸ்-ஓபிஎஸ் எனத் தொண்டர்கள் பெருமிதம் பாராட்டி வருகின்றனர்.