அஜித் ரசிகர்களால் நஷ்டம்: இருப்பினும் 'தர்பாரை' வெளியிடும் திரையரங்கு!

உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் 'லீ கிராண்ட் ரெக்ஸ்' என்ற திரையரங்கில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதே பெருமைக்குரியதாக கருதப்படும் நிலையில் இந்த தியேட்டரில் இதுவரை ‘கபாலி’, ‘2.0’ 'சர்க்கார்', 'பேட்ட', 'விஸ்வாசம்' போன்ற தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் இந்த தியேடரில் திரையிடப்பட்ட போது இந்த திரைப்படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் திரையின் முன் ஆடிப்பாடியதால் திரையரங்கின் திரைச்சீலை சேதமடைந்துள்ளது. இந்தத் திரையை மாற்ற ரூ 5.5 லட்சம் நஷ்ட ஈடாக திரையரங்க நிர்வாகத்திற்கு வினியோகஸ்தர்கள் கொடுத்துள்ளதாகவும் இதனை அடுத்து 'லீ கிராண்ட் ரெக்ஸ்' திரையரங்கில் இனிமேல் எந்த தமிழ்த் திரைப்படமும் திரையிடப்பட மாட்டாது என்ற முடிவை திரையரங்கு நிர்வாகம் எடுத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது இந்த தியேட்டரில் ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளதை இந்த தியேட்டரின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளம் உறுதி செய்துள்ளது. இருப்பினும் திரைச்சீலை அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.