முதல்வருக்கு ராகவா லாரன்ஸ் வைத்த மூன்று கோரிக்கைகள்

  • IndiaGlitz, [Monday,January 30 2017]

மாணவர்கள் நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து பெரும் உதவி செய்து வந்தவர் ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. போராட்டத்தின் கடைசி நாளன்று ஏற்பட்ட வன்முறையின்போதும் அவர் பதட்டத்தை குறைக்க மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையும் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் ராகவா லாரன்ஸ் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தின் இந்த கோரிக்கைகள் குறித்து கூறியவதாவது:

நண்பர்களே, ரசிகர்களே..நான் உங்களிடம் தற்போது ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நேற்று நானும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருசில மாணவர்களும் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்தோம். நாங்கள் அவரிடம் ஒருசில கோரிக்கைகளை முன்வைத்தோம். போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பது எங்களது முதல் கோரிக்கை. இரண்டாவதாக போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தடியடி மற்றும் கலவரத்தினால் காயம் அடைந்த அனைத்து தரப்பினர்களுக்கும் உடனடியாக உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது. மூன்றாவதாக வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அனுமதிப்பது.

மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் நாங்கள் முதல்வர் அவர்களிடம் முன்வைத்துள்ளோம். முதல்வர் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். மேலும் ஜல்லிக்கட்டுக்காக முதல்வர் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவரிடம் எங்களது நன்றியையும் தெரிவித்து கொண்டோம்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.