லிவ்-இன் உறவுமுறையில் வாழ்பவர்கள் விவாகரத்து பயனை பெறலாமா? கேரள நீதிமன்றம் தீர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணம் செய்துகொள்ளாமல் ஒப்பந்த அடிப்படையில் பதிவுசெய்துகொண்டு வாழ்ந்துவந்த இருவர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
திருமணம் செய்து கொள்ளாமல் ஒப்பந்த அடிப்படையில் பத்திரப்பதிவு செய்து கொண்டு ஒரு ஆணும் பெண்ணும் கடந்த 2016 முதல் கேரளாவில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த உறவுமுறையில் ஒரு குழந்தையும் அவர்களுக்குப் பிறந்துள்ளது. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நினைத்த இந்தத் தம்பதிகள் தங்களுக்கு சிறப்பு திருமணச் சட்டத்தின்படி விவகாரத்து வழங்க வேண்டும் என்று குடும்பநல நீதிமன்றத்தை அணுகி இருந்தனர்.
ஆனால் திருமணம் செய்யாமல் வாழும் உறவை திருமணமாக இந்தியச் சட்டம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் எந்தவொரு தனிப்பட்ட சட்டம் அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின்படியும் திருமணம் செய்துகொள்ளாமல் வெறும் ஒப்பந்தத்தின்படி சேர்ந்து வாழும் தம்பதிகள் விவாகரத்து கோர முடியாது என்று கருத்துத் தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து விவாகரத்து கோரிய தம்பதிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை முகமது முஸ்டாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் விசாரித்தனர். அதில் திருமணம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் பத்திரப்பதிவு செய்துகொண்டு வாழ்ந்துவந்த தம்பதிகளில் ஒருவர் இந்து. மற்றொருவர் கிறிஸ்தவர். இவர்கள் தனிப்பட்ட சட்டப்படியோ அல்லது சிறப்புத் திருமணச் சட்டப்படியோ திருமணம் செய்துகொள்ளவில்லை.
மேலும் எந்தவொரு தனிப்பட்ட சட்டம் அல்லது சிறப்புத் திருமணச் சட்டத்தின்படியும் இல்லாமல் வெறும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நபர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்தால் அவர்கள் அதை திருமணம் என்று உரிமை கோரவோ அல்லது விவகாரத்துக்காக விண்ணப்பிக்கவோ முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதேபோல மதச்சார்பற்ற சட்டத்துடன் ஒரு உடன்படிக்கையின் மூலம் இருவர் ஒன்றாக வாழ முடிவு செய்தால் அது ஒரு திருமணமாக உரிமை கோருவதற்கும் அதன்மீது விவாகரத்து கோருவதற்கும் தகுதி பெறாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இதனால் தனிப்பட்ட சட்டம் அல்லது சிறப்புத் திருமணச் சட்டத்தின் அடிப்படையில் திருமணம் நடந்தால் மட்டுமே விவாகரத்துக்கு கோர முடியும் என்றும் விவாகரத்து என்பது சட்டப்படியான திருமணத்தை பிரிப்பதற்கான ஒரு வழிமுறை என்று நிதிபதிகள் கூறியுள்ளனர்.
கூடவே லிவ்-இன் உறவுகள் மற்ற நோக்கங்களுக்காக அங்கீகரிக்கப்படலாம் ஆனால் விவாகரத்துக்காக அல்ல என்பதையும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.
இதனால் தனிப்பட்ட சட்டத்தைத் தவிர்த்து மதச்சார்பற்ற சட்டத்தின் மூலமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலான பத்திர பதிவு முறையிலோ இணைந்து வாழும் தம்பதிகள் விவாகரத்து பயனை பெற முடியாது என்பதை கேரள உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout