வதந்திகளை நம்ப வேண்டாம்: லதா ரஜினி பள்ளி நிர்வாகம் தகவல்
- IndiaGlitz, [Wednesday,August 16 2017]
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை, ரேஸ் கோர்ஸ் சாலையில் ராகவேந்திரா கல்வி குழுமம் என்ற பெயரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு தாளாளராக லதா ரஜினிகாந்தும், நிர்வாக அறங்காவலராக ரஜினிகாந்தும் பொறுப்பு வகித்து வருகின்றனர். ராகவேந்திரா கல்வி குழுமம் வெங்கடேஸ்வரலு என்பவரின் நிலத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது.
இந்த பள்ளிக்கு கடந்த ஐந்து வருடங்களாக வாடகை தரவில்லை என்றும் வாடகை தொகை ரூ.10 கோடி வரை உள்ளதால் கட்டிடத்தை காலி செய்யும்படி நிலத்தின் உரிமையாளர் கூறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென பள்ளி கட்டிடத்தை காலி செய்ய சொல்லி அங்கு படிக்கும் மாணவர்களை வெளியேற்றியதாகவும், மாணவர்கள் வெளியேறியவுடன் பள்ளிக்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்டட உரிமையாளர் வெங்கடேஸ்வரலு, 'கிண்டியில் லதா ரஜினிகாந்த் நடத்திவரும் பள்ளிக்கு 2009 முதல் தற்போது வரை 10 கோடி வாடகை பாக்கி தர வேண்டி உள்ளது. 10 கோடி ரூபாய் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது 2 கோடி ரூபாய் தருவதாக லதா தரப்பு கூறியது. ஆனால் இன்னும் தரவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி நிர்வாகம், வாடகை தராததால் பள்ளி இழுத்து மூடப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது. வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளது.