லதா மங்கேஷ்கர் பாடிய முதல் தமிழ்ப்பாடல் இதுவா? வெங்கட்பிரபு டுவிட்டுக்கு நெட்டிசன் பதில்!

மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பாடிய முதல் தமிழ் பாடல் இதுதான் என இயக்குனர் வெங்கட்பிரபு சுட்டிக் காட்டிய நிலையில் அந்த தகவலுக்கு நெட்டிசன் மறுப்பு தெரிவித்து பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது இரங்கல் செய்தியில், ‘ஆனந்த்’ என்ற படத்திற்காக இளையராஜா இசையில் எனது தந்தை கங்கை அமரன் பாடல் வரிகளில் ’ஆராரோ ’ஆராரோ’ என்ற பாடல் உருவானது என்றும் இந்த பாடல் தான் லதா மங்கேஷ்கர் பாடிய முதல் தமிழ் பாடல் என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்

இந்த பதிவிற்கு கமெண்ட்ஸ் பகுதியில் மறுப்பு தெரிவித்த நெட்டிசன் ஒருவர், ‘லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய முதல் பாடல் 1956 ஆம் ஆண்டு ’வானரதம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது என்றும், ஹிந்தியில் உருவானவுடன் 'உரன் கடோலா’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான ’வானரதம்’ படத்தில் தான் லதா மங்கேஷ்கர் முதன்முதலாக தமிழில் பாடினார் என்றும் ’இழந்தேன் அன்பே உன்னை நான்’ என்ற இந்த பாடல் அப்பொழுதே மிகப்பெரிய ஹிட் என்றும் பதிவு செய்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

கமல்ஹாசனின் ‘சத்யா’ திரைப்படத்தில் இரண்டு பாடல்கள், ’என் ஜீவன் பாடுது’ திரைப்படத்தில் ஒரு பாடல் உள்பட லதா மங்கேஷ்கர் தமிழில் சில பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.