'புலி' படக்குழுவினர் கூறிய புதிய ரகசியங்கள்

  • IndiaGlitz, [Tuesday,September 29 2015]

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடித்த 'புலி' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் இதுவரை வெளியான 'புலி' படத்தின் தகவல்களை கொஞ்சம் வரிசைப்படுத்தி பார்ப்போம்.

'புலி' படத்தின் கதையை இயக்குனர் சிம்புதேவன் நான்கு வருடங்களுக்கு முன்பே எழுதி முடித்துவிட்டார். கலை இயக்குனர் முத்துராஜிடம் அவ்வபோது இந்த படம் குறித்து ஆலோசனை செய்திருக்கின்றார். இந்த படத்தின் கதையை விஜய்யை வைத்து மட்டுமே எடுக்க வேண்டும் என்பதற்காக நான்கு வருடங்கள் விஜய்யின் கால்ஷீட்டுக்காக காத்திருந்துள்ளார். விஜய் முன்கூட்டியே கால்ஷீட் கொடுத்திருந்தால் இந்த படம் பாகுபலி'யை முந்தியிருக்கும் என கூறப்படுகிறது,.

பாகுபலி' படத்தின் சிவகாமி கேரக்டரிலேயே நடிக்க மறுத்த ஸ்ரீதேவிக்கு சிம்புதேவன் கூறிய கதை மிகவும் பிடித்துவிட்டதால், அந்த கேரக்டரில் நடித்தது மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் சொந்த குரலில் டப்பிங் பேசி கொடுத்துள்ளார்.

இதேபோல் வில்லன் வேடத்தில் நடிக்க முடியாது என்று கூறிய கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப், இந்த படத்தின் கேரக்டரின் தன்மையை புரிந்து கொண்டு நடிக்க சம்மதித்துள்ளார்.

'புலி' படத்தில் விஜய்க்கு அடுத்து முக்கியத்துவம் பெறுவது கிராபிக்ஸ் காட்சிகள்தான். 'பாகுபலி'யை விட அதிக கிராபிக்ஸ் காட்சிகள் இந்த படத்தில் அமைந்துள்ளதாகவும் ஏழு நாடுகளில் உள்ள டெக்னீஷியன்கள் பல மாதங்கள் இதற்காக உழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


ஸ்ரீதேவி மற்றும் ஹன்சிகா ஆகிய இருவரும் இந்த படத்தில் அரசி மற்றும் இளவரசியாக நடித்திருப்பதால், படப்பிடிப்பிற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே வந்து மேக்கப் போட்டு பெரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

தன்னால் படப்பிடிப்பு தாமதம் ஆகக்கூடாது என்பதற்காக அடுத்த நாள் காட்சிகளின் வசனங்களை முந்திய நாளே வாங்கிக்கொண்டு சென்று, படப்பிடிப்பிற்கு வரும்போதே விஜய் தயாராக வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில படங்களில் விஜய் தன்னுடைய குரலில் ஒரு பாடலை பாடும் வழக்கத்தை கொண்டுள்ளார். அதேபோல் இந்த படத்திலும் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து அவர் 'ஏண்டி ஏண்டி' என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார். 'தமிழன்' படத்திற்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் நாயகியும் பாடல் பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு ஏன் நடக்கின்றது என்று படக்குழுவினர்களுக்கே புரியாத மர்மமாக இருந்ததாம். ஆனால் தற்போது அந்த காட்சிகள் படத்தில் இணைக்கப்பட்டுள்ள விதத்தை பார்த்து படக்குழுவினர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார்களாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு காட்டுக்குள் நடந்தபோது ஸ்ருதிஹாசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், மருத்துவரின் உதவியுடன் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தமிழ் படத்தில் முற்றிலும் புதிதான சித்திரக்குள்ளர்கள் வேடங்களில் நடித்துள்ள ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன், இமான் அண்ணாச்சி ஆகிய காமெடி கூட்டணிகள் விஜய்யோடு இணைந்து பண்ணியிருக்கும் காமெடி கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தம்பி ராமையா, சத்யன் கேரக்டர்கள் காமெடியின் உச்சகட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.

'பாகுபலி'யில் இருக்கும் போர்க்காட்சிகள் இந்த படத்தில் இல்லை என்பதாலும், இரண்டு படங்களின் கதைக்களமும் முற்றிலும் வெவ்வேறானவை என்பதாலும் பாகுபலி'யுடன் இந்த படத்தை ஒப்பிட வேண்டாம் என சிம்புதேவன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விஜய் இந்த படத்தில் முதன்முதலாக வாள் சண்டைகளை டூப் இல்லாமல் போட்டிருக்கின்றார். இதற்காக அவருக்கு பிரத்யேகமாக வாள் பயிற்சியை கற்று கொடுத்துள்ளனர் படக்குழுவினர்.


விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பஞ்ச் வசனங்கள் இந்த படத்தில் உண்டு என்றும் கூறப்படுகிறது.

இந்திய மொழிகளில் மட்டுமின்றி ஜப்பான் மற்றும் சீன மொழிகளிலும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் மிகவிரைவில் இரு நாடுகளிலும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

தற்போது வந்துள்ள தகவலின்படி 'புலி' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.