கொரோனா போன்று உருளைக் கிழங்கை தாக்கும் “லேட் பிலைட்” நோய்த்தொற்று!!! மீண்டு வந்தது எப்படி???
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகமே கொரோனா நோய்த் தொற்றின் பிடியில் சிக்கி தவிப்பது மாதிரி ஒரு காலத்தில் “லேட் பிலைட்” (Late Blight) என்ற நோய்த்தொற்று உருளைக் கிழங்கு உற்பத்தியை முற்றிலும் நாசப் படுத்தியிருக்கிறது. இந்த நோய்த் தொற்றால் பிரதான உணவான உருளைக் கிழங்கை இழந்து மக்கள் வறுமையின் பிடியிலும் சிக்கி இருக்கின்றனர். இந்த நோய்த் தொற்றின் வரலாறு நம்முடைய நீலகிரியில் நடந்திருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமே.
லேட் பிலைட் நோய்க்கிருமி உருளைக் கிழங்கின் தாவரத்தைத் தாக்கி அழிக்கும் ஒரு பூஞ்சை நோய்த்தொற்று ஆகும். இது 1960 களில் ஊட்டி உருளைக் கிழங்கு என்ற ரகத்தையே முற்றிலும் காணாமல் செய்திருக்கிறது. இந்த நோய்த் தொற்றை முறியடித்து மறுபடியும் உருளைக் கிழங்கு சாகுபடியை எப்படி விவசாயிகள் மேற்கொண்டனர் என்ற தகவல்கள் தற்போது கொரோனா நேரத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த நோய்த்தொற்று நீலகிரி உருளையைத் தாக்குவதற்கு முன்பே 1883 இல் வட இந்தியாவில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நோய் எந்த அறிகுறிகளையும் வெளியே காட்டாமல் லேட் பிளைட் பூஞ்சை நோய்த்தொற்று உருளைக்கிழங்கு செடியின் அடியில் மண் துகள்களுக்குள் புகுந்து கொண்டு முதலில் விதையை தாக்கும். விதையை தாக்கிய 3 வது நாள் செடியை நோய்க்கு ஆளாக்கிவிட்டு மற்ற செடிகளுக்கும் அடுத்தடுத்து பரவத் தொடங்கும். ஆனால் செடியை வெளியில் இருந்து பார்க்கும் போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது முற்றிலும் தெரியவே தெரியாது. உருளைக் கிழங்கை சாகுபடி செய்யும்போது விளைந்த உருளைக் கிழங்குகள் உள்ளுக்குள் அடர்ந்த நிறத்தில் கெட்டுப்போனத் தன்மைக்கு ஆளாகியிருக்கும். ஒரு செடிக்கு இந்த நோய்த்தொற்றுப் பரவினால் ஏக்கர் கணக்கில் பக்கத்தில் உள்ள எல்லா செடிகளையும் தாக்கி அழித்து விடும் கொடிய நோயாக நீலகிரி மாவட்டத்தில் இது அறியப்பட்டு இருந்தது.
இது இந்தியாவில் மட்டுமல்ல அயர்லாந்து, ஜெர்மனி, கனடா, போலந்து, சீனா, ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்குள் கொடிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அயர்லாந்தில் 1845 இல் இந்த நோய்த்தொற்று அந்நாட்டு மக்களின் பிரதான உணவாக இருந்த உருளைக் கிழங்கில் பாதிப்பை ஏற்படுத்தி மக்களை கடும் வறுமைக்குள் தள்ளியது. கொடிய பஞ்சத்தால் அயர்லாந்து மக்கள் பக்கத்து நாடுகளுக்கும் புலம் பெயர்ந்து போக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்
ஊட்டி உருளைக்கிழங்கு என்ற ரகம் அனைவரும் விரும்பப்படும் ஒன்றாக இருப்பதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் ஆண்டுதோறும் விளைவிக்கப்படு கிறது. ஆனால் 1961 இல் இதன் அறுவடையே இல்லாமல், அப்படி ஒரு ரகமே அழிந்துவிடும் நிலைமைக்கு இந்த லேட் பிலைட் பூஞ்சை நோய்த்தொற்று செடிகளில் பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது. நோய்த்தொற்று பரவ ஆரம்பித்த 1961 ஜுன் முதல் வாரத்தில் மட்டுமே 40 விழுக்காடு செடிகளை இது தாக்கி அழித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது பரவும் வேகம் தற்போது பரவி வருகிற கொரோனாவைப் போன்று தீவிரத் தன்மையுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நோயை எதிர்க்கொள்ள ஸ்காட்லாந்தின் தாவர இனப்பெருக்க ஆராய்ச்சியாளர் வில்லியம் ப்ளேக் என்பவர் ஊட்டிக்கு வந்து விவசாயிகளுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறார். அடுத்து பூஞ்சை நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது பற்றிய ஆய்வுகள் தொடரப்பட்டு இருக்கின்றன. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் பூஞ்சையை தாக்கி அழிக்கும் விதத்தில் கிருமிநாசினி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிருமிநாசினி மருந்தில் முதலில் விதைகளை முக்கி அதற்குப் பின்னரே தோட்டத்தில் பயிரிட்டு இருக்கின்றனர். இப்படித்தான் ஊட்டி உருளை கிழங்கு என்ற ஒரு ரகமே லேட் பிலைட் என்ற பூஞ்சை நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றப் பட்டு இருக்கிறது. தாவரங்களில் பல நோய்த்தொற்றுகள் ஏற்படுவதுண்டு. தாவரங்களும் இத்தகைய நோய்ப் பாதிப்புகளை எதிர்த்துத்தான் வளர்ந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments