ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் ஆதரவு

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் லண்டனில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது அவர் தமிழ்ப்பாடல் மட்டுமே பாடியதாக குற்றம் சாட்டி லண்டன்வாழ் வட இந்திய ரசிகர்கள் நிகழ்ச்சி முடியும் முன்பே வெளியேறியதாக செய்திகள் வெளிவந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் வட இந்தியர்கள், ஏ.ஆர்.ரஹ்மானை கடுமையாக விமர்சனம் செய்தனர். அதற்கு இந்தியாவின் பல பிரபல பாடகர், பாடகிகள் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் தற்போது தனது கருத்தை தெரிவித்துள்ளார். நம்முடைய இசை ரசிகர்களில் சிலர் மிகவும் சகிப்புத்தன்மை அற்றவர்களாக இருக்கிறார்கள். 70 வருட அனுபவத்தில், பஞ்சாபி, பெங்காலி மற்றும் டோக்ரி உட்பட மேடையில் பல பிராந்திய மொழி பாடல்களை பாடியுள்ளேன். பார்வையாளர்கள் ஒவ்வொரு இந்திய மொழியிலும் எனது பாடல்களை ரசித்து கேட்டனர்.
இசைக்கு மொழி என்பதே கிடையாது. ரஹ்மான் பல புகழ்பெற்ற பாடல்களை தமிழில்தான் பாடியுள்ளார். அவற்றில் ஒருசில பாடல்கள் இந்தியிலும் வெளிவந்து, சம அளவில் புகழ்பெற்றது. இசையில் மொழியை புகுத்துவது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்காது.
நான் எந்த மொழியில் பாடுவதென்றாலும் விரும்பியே பாடுவேன். ஒருசில பாடல்களின் அர்த்தம் எனக்கு புரியாமல் இருந்தாலும் இசையை ரசித்தே பாடுவேன். என்னுடைய ஒரே பயம் தெரியாத மொழியில் பாடும்போது உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான். கடவுள் கிருபையால் அதுபோன்ற குற்றச்சாட்டு என்மீது இதுவரை வரவில்லை' என்று கூறியுள்ளார்.